கி.பி. 1400 வரை தமிழ் நாட்டில் சாதியில்லை
வட இந்தியாவில் கி.மு. 8ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் நாகரிகமும் வகுப்புகளும் தோன்றின. கி.மு. 2ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் வைதீக பிராமணியம், சாதியம் போன்றவற்றிற்கான கருத்தியல்கள் தோன்றத் தொடங்கின.
கி.பி. முதல் நூற்றாண்டுக்குப் பின்னர் தான் வட இந்தியாவில் சாதியம் தோன்றியது. குப்தர்காலத்தில் (கி.பி. 4ஆம் 5ஆம் நூற்றாண்டு) சாதியம் அரசின் சட்ட அங்கீகாரத்தைப் பெற்று சமூகம் முழுவதும் நிலைநிறுத்தப்பட்டது.
சிலர் சாதி இயற்கையாக உருவாகியது எனக் கருதுகின்றனர். அது உண்மையல்ல. ஒரு சமூகக் குழுவின் மேல்நிலையைப் பாதுகாப்பதற்காகத் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சாதியம்.
சாதி செயற்கையாக உருவாக்கப் பட்டது என்பதற்குக் கேரளச் சமூகம் ஒரு சான்றாக இருக்கிறது. கி.பி. 250 வரை தமிழ்ச் சமூகமாக இருந்த கேரளம், பிராமணர்களின் வருகைக்குப் பிறகு சாதியச் சமூகமாக மாறியது.
சிலர் தொல்லினக்குழுவிலிருந்து சாதி தோன்றியதாகக் கருகின்றனர். தொல்லினக் குழுக்களின் அகமண முறையையும் அதன் கண ஆட்சி முறையையும் அழித்து அதன்மேல் கட்டப்பட்டதுதான் நாகரிக கால ஒருதார மணமுறையும், அரசும். ஆகவே தொல்லினக் குழுக்களிடமிருந்து சாதி தோன்றவில்லை.
பழந்தமிழ்ச் சமூகத்தில் இருந்த உடன்போக்கும், பொருள்வயிற்பிரிவும் அன்று சாதி இருக்கவில்லை என்பதற்குச் சான்றுகளாக இருக்கின்றன. அதன் பிந்தைய களப்பிரர் காலத்திலும் சாதி தோன்றவில்லை.
அதன் பிந்தைய பல்லவர் காலத்தில் பிராமணர்கள் நிலபுலமும் செல்வ வளமும் கொண்டவர்களாக இருந்த போதிலும் அன்றும் சாதி தோன்றவில்லை. சோழர் காலத்தில் பிராமணர்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, அடக்கி வைக்கப்பட்டு தவறுகளுக்குக் கடும்தண்டனையும் பெற்றார்கள்.
ஆதலால் சோழர் பாண்டியர் காலகட்டத்திலும் தமிழ்ச்சமூகம் குறிப்பிட்ட தொழிலை வழிவழியாகச் செய்துவந்த குடிமுறைச் சமூகமாகவும், சாதியற்ற வர்க்க, வகுப்பு அடிப்படையிலான சமூகமாகவும் தான் இருந்து வந்தது. இறுதியாக கி.பி. 1400 வரை தமிழ்நாட்டில் சாதியில்லை என்பதே இந்நூலின் ஆய்வு முடிவு. .
இங்கு சொல்லப்பட்ட அனைத்தும் குறித்து இந்நூல் உரிய தரவுகளோடு விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்து நிறுவியுள்ளது.
ஆகவே கி. பி. 1400க்குப் பிறகு விசயநகர, நாயக்கர் காலத்தில் தான் சாதியம் தோன்றியது. ஆங்கிலேயர் காலத்தில் அது இன்றைய நிலையை அடைந்தது.
Be the first to rate this book.