ஒரு வெளியில் வெறுமனே யதார்த்த நிகழ்வின் உருவங்களை உருவாக்கிக் காண்பிக்கும் கவிதை வகைகளின் வடிவங்களை முற்றிலுமாகத் தவிர்த்து, இணைப்புச் சொற்களின் வழியே அர்த்தத்தளங்களை வெளிப்படையாகப் பேசும் கவிதைகளுக்கு எதிர்புறமாக நின்று, தனித்த வெளிப்பாட்டு முறையில், சொற்சிக்கனத்தின் வகைமைகளில் மிகு கவனமும், குறிப்புணர்த்தும் பொருத்தமானச் சொற்களால் இணைத்தும், இசையின் வழியாக நுட்பமாகக் கத்தரித்துப் பிரித்தும் தெளிவாக வரையறையும் செய்துகொள்கிற கவிதைப் பிரதிகளுக்குள் இத்தொகுப்பின் கவிதைகள் அடக்கம் கொள்கின்றன. தீவிர வாசிப்பைக் கோருபவையாகவும் பிரக்ஞையின் சவாலான விரிந்திடுபவையாகவும் அனுபவத்தின் வேறுவேறான வடிவச் சாராம்சங்களின் சில சாத்தியப்பாடு களை வெவ்வேறு நிலைகளில் பொருத்திப் பார்ப்பதுமானவையாகவும் நவீன ஓவிய வடிவத்தின் புதிர் நிறைந்திருக்கும் வண்ணக் கலவைப் பூச்சுகளின் சாயல்களையும் அர்த்தங்களையும் கொண்டவையாகவும் பிரதாப ருத்ரனின் கவிதைகளை வகைப்படுத்தலாம். யதார்த்தத்தில் ஒரு குரல் பேசப்படுவதற்கும், கவிதையில் ஒரு குரல் எழுந்து அடங்குவதற்குமானத் தருணங்களும், இடைவெளிகளும், வர்ணனைகளும் நிஜத்திலிருந்து மேலோங்கி இன்னொரு நிஜத்தின் அரூப வடிவமாக உயிர் பெற்றுக் கொள்ளும் இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது. இத்தொகுப்பில் பல கவிதைகளில் இந்த வேறுபாட்டையும், அதன் தனிமையான இயங்கியல்களையும் லாவகமாக உணர முடிகிறது.
Be the first to rate this book.