பெண்களின் கவிதைச் செயல்பாட்டில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இலக்கியத்திலும் இந்த மாற்றங்களை அவதானிக்கலாம். ஜனரஞ்சக வாசகர்களும்,சீரியசான வாசகர்களும் கலந்துவிட்ட ஒரு இணைய உலகம் உருவானதே இந்த மாற்றங்களுக்குக் காரணம். பெண்களே தமது உடலைக் கொண்டாடுவதற்கும், மூர்க்கமான எதிர்ப்புக்குரலை வெளிப்படுத்துவதற்கும் தனியான பெண்மொழியை அக்கறைகொண்ட எழுத்தியக்கத்திற்கு கவிதையைப் பயன்படுத்திய போக்கிலிருந்து விலகிய புதியமாற்றம் இது.
கவிதைகளின் உள்ளிழைகளில் எதிர்பாராத தருணங்களில் இந்த அதிர்வுகள் கிளர்ந்து வெளிப்படுகின்றன. அந்த அதிர்வுகள் பவித்திரமான சொற்களின் இடையே சட்டென்று எழும் புயலைப்போன்று நிகழ்கிறது. தந்திக்கம்பிகளைச் சுண்டிவிட்டால் ஏற்படும் அதிர்வைப் போன்ற, இந்தவகைக் கவிதைச் செயலை முனெடுப்பவர்களின் பட்டியலில் முஜாமலாவையும் தைரியமாக இணைத்துக்கொள்ள முடியும் என்றே நம்புகிறேன்.
அதிரும் தந்திக் கம்பிகளில் தூசிகூட உட்காராது என்றான் பிரமிள். அப்படித்தான் முஜாமலாவின் கவிதைகளின் உள்ளே ஏற்படும் அதிர்வுகள் பிறருடைய கவிதைப் பண்புகளைக் குந்தவிடாது தவிர்க்கிறது. அன்பு. குடும்பம், ஏக்கம், வலி, பெருங்கோபம் என அனைத்தையும் கவிதைக்குள் வைக்கும்போது. சொற்களைச் சுண்டி அதிரச்செய்துவிட்டு நம்மிடம் வாசிப்புக்குத் தருவதைப்போன்ற ஒரு தோற்றத்தை தருகிறது. அதிர்ந்து கொண்டிருக்கும் கவிதைக்குள் உள்ள இந்த மனிதப் பண்புகளில் நமது கருத்துக்களை கொண்டுபோய் உட்கார வைக்க முடியாதிருக்கிறது. அப்படி அதிரச்செய்வதே அவரின் தனித்துவமாகவும் எண்ணுவதற்கு நம்மைத் தூண்டுகின்றன.
-றியாஸ் குரானா
Be the first to rate this book.