முழு நிலவு காண எவ்வளவோ ஆனந்தமாக இருக்கிறது. அதன் அழகிலே சொக்காதவர்கள் கிடையாது. கவி பாடுகிறான் களிப்புடன் பாமரருக்கும் ஏதோ ஓர் வகையான களிப்பு. நிலாக்காலம் - முழுநிலவு நாள் இவைகளையே பல கதைகளிலே அழகாகத் தீட்டுகிறார்கள். அது போலத்தானம்மா, பெண்களின் வாழ்விலும் முழுத் திருப்தியும் மகிழ்ச்சியும் நிரம்பி, ஒளி வீசினால், அதனால் பெண்களுக்கு மட்டுமல்ல. ஆடவர் உலகுக்கும் நன்மைதான் ஏற்படும்.
தேய்பிறையின்போது தெருவும் வீடும் சாலையும் இருண்டு விடுகின்றன. மக்கள் பாழாய்ப்போன இருட்டுக்குப் பயந்து வீட்டோடு இருப்பார்கள். அருவருப்பு, பயம் இவைகளால் பீடிக்கப்படுகிறார்கள். முன் இருட்டு, பின் இருட்டு, முழு இருட்டு. மை இருட்டு என்று விதவிதமாகப் பிரித்துக் காட்டி வருத்தப்படுவார்கள். வெளியிலே உல்லாசமாக உலவவோ ஒளி இல்லை வீட்டுக்குள்ளே இருந்தாலோ நிம்மதி இல்லை; இருட்டுக் காலமே கள்ளருக்கு வேலை மிகுதியான நாள். ஆகவே, வீட்டிலே உறக்கமுற்றுக் கிடப்பர். இவ்வளவும் நிலவு இல்லாததால் வரும் கேடு. அதுபோலவே, பெண்ணின் வாழ்வு இருண்டு கிடந்தால், கஷ்டம் பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆடவருக்குத் தான்".
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.