புதிய நிலம், புதிய அறிவு, புதிய அனுபவம் என்று பரவவேன்டியப் பெண் அலையை முடக்கி வைத்துக் கொண்டிருக்கும் உலகு முழுமை அடைய முடியாது என்கிறார் உமா மோகன்.
இதை அவர் நேரிடையாகச் சொல்லவில்லை. சொல்லக் கூடாது ஏன் என்றால் இது கதை. கதைகளுக்கு என்று மாறுதலாகச் சொல்முறை இருக்கவே செய்கிறது. கதையில் வரும் பெண்களின் பயணம் தேடுதலின் தொடக்கம்தான். பயம்,மிரட்சி,எல்லாம் இருக்கும்தான் அனைத்தையும் மீறியே அவர்கள், அவர்களை அறியாமலையே ஒரு புதிய விழிப்புக்கு உள்ளாகிறார்கள். எல்லாப் பயணும் முதல் அடியில் இருந்தே தொடங்குகிறது.
உனக்கு இது இடம், எனக்கு இது இடம், ஆணுக்கு இது, பெண்ணுக்கு இது என்றெல்லாம் வகுக்கப்பட்ட இடம், களம், எல்லாம் உடைகிறது. உடைவது ஏதோ ஒரு மாற்றம் கொள்கிறது. பழமைகள் அவைகளின் பிடிகள் இன்னும் இற்று விழுந்ததாக இல்லை என்றாலும், புதியது என்கிற ஒன்று அரும்புகிறது. உமா மோகனின் கதைகளில் பல அரும்புகள்.
புதுச்சேரியில் வசிக்கும் ஊடகவியலாளர் உமா மோகன் (அகில இந்திய வானொலி அறிவிப்பாளார்) மாணவர்களுடனும் மகளிருடனும் இயங்குவதில் விருப்பம் கொண்டவர்.
12 கவிதைத் தொகுப்புகள் உள்பட இவரது பல நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது சிறுகதைத் தொகுதிக்காக கலை இலக்கிய பெருமன்ற விருதினையும். கவிதைகளுக்காக சௌமா அறக்கட்டளை உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர். புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் இலக்கிய விருது வென்றவர்.
Be the first to rate this book.