மேதை என்கிற சொல்லுக்கு ஓர் இலக்கணமாக இருந்தவர் சொ. விருத்தாசலம். புதுமைப்பித்தன் என்கிற புனைபெயர் அவருக்கு மிகவும் பொருத்தமான பெயர். நல்ல இலக்கியம் அமைக்க ஒரு புதுமை ஆர்வமும் அத்துடன் சற்றே பித்தமும் சேர்ந்திருக்க வேண்டும். இரண்டும் அவரிடம் இருந்தன.
- க. நா. சுப்ரமண்யம்
சொ.வி. ஒரு மேதை, திறமைசாலி மட்டும் அல்ல, திறமையைச் சம்பாதித்துக்கொள்ள முடியும். மேதை தானாக இயங்குவது. மேதையை உலகம் உடனே புரிந்துகொள்ள முடிகிறதில்லை; பின்னிட்டுத்தான் அறிந்துகொள்ளுகிறது.
-சி. சு. செல்லப்பா
இலக்கியக் கள்வனின் பேய்க் கனவு; புத்தகாசிரியர்களுக்கு ஓட்டக்கூத்தன்; சாகக்கிடந்த தமிழுக்கு சஞ்சீவி பாவதம்; உலக இலக்கியச் சங்கப் பலகையில் "உங்களிலே யானொருவன் ஒவ்வேனோ" என்று பாடாமலே இடம்பெற்ற மேதை.
-தொ. மு. சி. ரகுநாதன்
எடுத்துக்கொண்ட விஷயத்தை உயிரோடு, உணர்ச்சியோடு பிரதிபலிக்கும் ஆற்றல் வாய்ந்த நடை; கையாளும் நடையின் பெருமிதத்துக்கேற்ற, மிக ஆழ்ந்த விஷயம்; கதையின் உருவமும் பூரணத்துவம் பெற்றது. உருவமும் கதைப் போக்கும் தனித்தன்மை பெற்றவை. உலகத்தின் எந்தக் கதாசிரியரின் பாணியையும் பின்பற்றாமல், தமக்கென்று ஒரு தனிப் பாணியை அமைத்துக் கொண்டார். இப்படி அமைத்துக்கொண்ட தமிழ் எழுத்தாளர்கள் மிக மிகச் சொற்பம்.
- கு. அழகிரிசாமி
புதுமைப்பித்தன் சிந்தனையைக் கலையாக்கும் கலைஞன்; கலைப்படைப்பு அவரது சிந்தனை - கற்பனையின் பிழிவு, மேலோட்டமாக வாழ்க்கையைப் பார்த்து, நடக்கின்ற எதார்த்தத்தை இலக்கியப் படைப்பில் அவர் பிரதிபலிக்கவில்லை. அறிவு இகந்த விளிம்பில் தம்மை நிறுத்திக்கொண்டு அறிவார்ந்ததாகச் சொல்லப்படுகின்ற எதார்த்த வாழ்க்கையை அவதானிக்க முயன்றுள்ளார்.
- ராஜ் கௌதமன்
Be the first to rate this book.