தொழில்நுட்ப வளர்ச்சி நம் வாழ்க்கையை எளிமையாக்குகிறது எனச் சொல்வதை வழக்கமாகக்கொண்டிருக்கிறோம். உண்மையில், திறன்பேசி, இணையம், சமூக ஊடகம் போன்ற தொடர்பாற்றல் தொழில்நுட்ப வசதிகளானாலும், டிஜிட்டல், மின் வசதி கொண்டு இயக்கப்படும் மெட்ரோ ரயில் போன்ற போக்குவரத்து தொழில்நுட்பமானாலும் அத்தனைக்கும் அடிநாதம் அறிவியல்தான். அப்படி இருக்க நம் வாழ்க்கையை எளிதாக்கிய பாராட்டுப் பத்திரம் போய்ச் சேர வேண்டியது அறிவியலுக்குத்தானே? வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்தால் சென்ற மனித இனம் உலகை உற்று நோக்கி அதனைப் புரிந்துகொள்ளத் தொடங்கியதில் அறிவியலின் பங்கு பிரதானமானது. மனிதன் கண்டுபிடித்த அறிவியல்தான் மனிதன் யார் என்பதை அறிவுப்பூர்வமாகவும் நடைமுறை சார்ந்தும் கண்டுபிடிக்க மனிதக் குலத்துக்கே உதவியது.
அதற்காக அறிவியல் என்றாலே கண்டுபிடிப்புகள் எனச் சுருக்கிப் புரிந்துகொள்ளலாகாது. அனைத்தையும் அறிவியல்பூர்வமாக அணுகி, அலசி, ஆராய்வது அறிவியலின் முக்கிய பண்பாகும். புதிய கண்டுபிடிப்புகள் தலையெடுக்க இந்த பண்புதான் அத்தியாவசியமானதும் கூட. இந்தக் கண்ணோட்டத்தில், மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை ஊட்ட, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பள்ளி நாளிதழான ‘வெற்றிக்கொடி’யில் எழுதப்பட்ட தொடர்தான், ‘புதுமை புகுத்து’
Be the first to rate this book.