மெல்லிய சாவு
கடலின் சிதிலங்களைப்
பொறுக்கி முடியும் தறுவாயில்
வெண்ணிற முத்தொளி பிரம்மாண்டமான
அமைதியுடன் அகப்படுகின்றது
சாவின் மெல்லிய வலியும்
ஒரு கோடி மின்னலும்
அதனை காலத்தின் கடைசிப்
பள்ளத்தாக்கில் புதைத்த தினமொன்றில்...
சொற்களற்ற மனிதன்
இறப்பதற்கும் சொற்களற்றவனாக
வாழ்தலுக்குமான சராசரி வலியை
எறும்புச் சதையில் அவர்கள்
ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்
ஒரு முறை இறந்துகொண்டிருப்பவர்கள்
மரணத்தை சில வருடங்களுக்கு
முன்னரே சுவைத்திருந்தனர்.
பிரமாண்டமான அமைதியில்
இசைக்கத் துவங்கியிருந்த
பாடல் அடுத்த பூமியில்
இதைவிடவும் அற்புதமாக
ஒலித்துக்கொண்டிருக்கின்றது
அது மெல்லிய சாவை உறக்கமென்கின்றது
அல்லது காதல் என்கின்றது.
Be the first to rate this book.