இரவி நவீன கவிதைகள் எழுதி வருபவர். கனவுநிலை உரைத்தல் (ஆனந்த விகடனில் வந்த கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா பாராட்டிய தொகுப்பு), புறா குனுகும் கிணறு, கெட்ட வார்த்தைகள் சொல்லிக் கொள்வோமா? ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. தாம்பரம் கிறித்தவக் கல்லூரி வாயிலாக, 'நவீன கவிதைகளில் பின்நவீனத்துவத்தின் செல்வாக்கு' எனும் பொருண்மையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப்பிள்ளை, எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப்பிள்ளை, நந்தன், அவள் பெயர் ரஜ்னி போன்ற படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். சென்னை வடபழனி வளாக எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகின்றார்.
The Gay Science எனும் பிரதியில் நீட்சே God is dead என்று கடவுளின் மரணத்தை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து டெரிடா. லியோடார்ட் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டதே இன்றுவரை பலரால் ஜீரணித்துக் கொள்ள முடியாத கலகக் கோட்பாடான பின்நவீனத்துவம். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான நம்பிக்கைச்சிதைவுகளின் விளைவான வெளிப்பாடே, எல்லா ஒழுங்குகளையும் சந்தேகித்த பின்நவீனத்துவம், மதம்,அரசியல், நீதி, உண்மை ஆகிய பெருங்கதையாடலை எதிர்க்கிறது. நம்மூரில் சொல்லாடப்படும் சிற்றின்பம் (monokrones hedonis) எனும் கணநேர இன்பத்தைப் பின்நவீனத்துவம் வலியுறுத்துகிறது. இத்தகைய பின்நவீனத்துவக் கூறுகளைப் பல்வேறு தளங்களில் பொருத்திப் பார்க்கும் முயற்சியே இந்நூல்.
Be the first to rate this book.