பேட்டி என்பதே தன்னை தீர்த்துக்கொள்வதுதானே - சமயவேலின் வரிகள் பல்வேறு வகைகளிலும் பேட்டி என்பதன் முழுப்பொருளை விளக்குவதாய் உள்ளது. இவ்விளக்கம் பேட்டி காண்பவருக்கும் காணப்படுகிறவருக்கும் பொதுவில் பொருந்தும் தன்மை கொண்டதாயும் இருக்கிறது. தான் இயங்கும் புலம் சார்ந்து ஒருவருக்குள் சேகரமாகும் அனுபவங்கள். அதுகுறித்த மதிப்பீடுகள், ஐயப்பாடுகள், உள்முகத்தேடல்கள், புதிய வெளிச்சங்கள், முன்மொழிவுகள், விமர்சனங்கள் என அனைத்தும் உடைப்பெடுத்து வெளிப்பாய்வதற்கான வாய்ப்பை பேட்டி என்ற வடிவம் வழங்குகிறது. ஆனால் வெறும் கேள்விகள் யாரையும் பேசவைத்துவிடுவதில்லை. பேசவைக்கும் கேள்விகள் வெறும் எழுத்துக்களின் சேர்மானத்தில் பிறந்துவிடுவதில்லை. அது, ஒருவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கு இசைவான சூழலையும் தன்னை புரிந்து கொண்டிருக்கிற ஒருவருடன்தான் உரையாடுகிறோம் என்கிற நம்பிக்கையையும் உள்ளடக்கிய கேள்விகளின் வழியேதான் சாத்தியப்படுகிறது. எனில், பேட்டி காணப்படுகிறவரின் புலம் சார்ந்த அறிவு பேட்டி காண்பவருக்கும் அவசியப்படுகிறது. இரண்டு கில்லாடிகள் ஒருவரையொருவர் வீழ்த்தத் துடிக்கும் களமாக அல்லாமல் பரஸ்பரம் ஒருவருக்குள்ளிருந்து ஒருவர் அறியத்தகுந்தவற்றை கண்டெடுக்கும் தேடலாக நிகழ வேண்டியுள்ளது. கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி, மொழி, களப்பணி என பன்முகத்தளங்களில் காத்திரமான பங்களிப்புகளை ஆற்றி வருகிறவர்களில் குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளிடம் அப்பணசாமி மேற்கொண்ட நேர்காணல்களில் இப்படியானதொரு அணுகுமுறை கைக்கொள்ளப்பட்டிருப்பதை உணரமுடிகிறது.
-ஆதவன் தீட்சண்யா
Be the first to rate this book.