வடசென்னை வாழ்வியலில் நான் கேட்ட, பார்த்த, சொல்லப்பட்ட, அனுபவித்த யதார்த்த நிகழ்வுகளை ஆவணப்படுத்த கதம்ப மாலை கட்டுவது போல் நினைவுச் சரடிலிருந்து உருவி எடுத்து எழுத ஆரம்பித்தேன். அது ஒரு ஜிக்ஜாக் போல் ஏற்ற இறக்கத்தோடு பயணித்து நேர்க்கோட்டு நாவலாக அல்லாமல் கலைத்துப் போட்ட வடிவத்திலேயே தன்னைத் தகவமைத்துக் கொண்டிருந்தது. என் பக்கங்களிலும் சாதியின் சாயல் துக்கத்தின் பாலாடை போல் படர்ந்திருப்பதையும் நாவலில் வெளிப்படும் நபர்களின் மனதில் சாதியின் பதற்றம் தும்பி சிறகசைப்பு போல சதா படப்படப்பதையும் உணர முடிந்தது. அந்தப் பதற்றத்தை குறிக்கும் சொல்லான, ’பறதி’ என்பதையே நாவலுக்குச் சூட்டினேன். திராவிடக் கட்சி மீதான விமர்சனம் மதமாற்றம் ஏற்படுத்தும் மனச்சிக்கல், பட்டியல் இன சாதிக்குள்ளும் நிலவும் சாதி ஆதிக்கம், சிந்தனையாளர்கள் உட்பட எல்லோருக்குள்ளும் விடுபட முடியாமல் விழுதாகத் தாங்கி நிற்கும் சாதிப் பற்று, புனைவின் மூலம் சாதி மோலாண்மையை அரூபமாய் நிறுவ முயலுதல்..என எல்லாமே இதில் கேள்விக்குள்ளாகியிருக்கும். அதிகாரத்தின் ரூபங்கள் எப்படியிருந்தாலும் அதனுள் சிரிக்கும் சாதியத்தை நீங்கள் உணர முடியும்.
Be the first to rate this book.