"மருதாள் எனும் ஒரு இளம் பெண். தான் யார் எனத் தெரியாத நிலையை யாரொருவரும் தன் வாழ்நாளில் எதோ ஒரு கணத்தில் உணரும்போது அது ஒரு மிகவும் கொடூரமான அனுபவமாக இருக்கும். தன் தாய் வயிற்றில் தான் இருந்தபோது கைவிடப்பட்ட பெண்ணின் கதை அது. பல ஆண்டுகளுக்குப் பின் தன் தந்தையைத் தேடிச் சென்ற மகளிடம் அவளைப் பெற்றவன் முகம் கொடுத்துப் பேசவும் தயாரில்லாதவன். ஆனால் அவனுடைய இப்போதைய மனைவியின் ஊடாகக் சுருணை கசிகிறது. அந்தக் கனிவின் ஊடாக வெளிப்படும் மானுட மேன்மையில் நாமும் கரைகிறோம்.
இன்னொரு கதை. தாயும் மகளுமாக வாத்துக்கள் மேய்த்து வந்து, இரவில் ஊர்ச்சாவடி அருகில் அவற்றை அடைப்பார்கள். வாத்து முட்டை வியாபாரம் நடக்கும். வாத்துக்கள் விற்பனையும் நடக்கும். அந்தப் பகுதியில் உள்ள நிலச் சுவான்தார்களும், ஆதிக்க சாதியினரும் இந்த நாடோடிகளை எப்படி அலட்சியமாக நடந்துவார்கள், மிரட்டுவார்கள். நாடோடிப் பெண்களைக் கமெண்ட்' செய்து கிண்டலடிப்பார்கள் என்பதை எல்லாம் என் நினைவிற் கொணர்ந்தது 'குமிழித் தூம்பு' சிறுகதை.
நல்ல, அற்புதமான, கவிதை நிகர்த்த சொல்லாட்சிகளும் இந்தத் தொகுப்பு முழுமையும் விரவிக் கிடக்கின்றன. குமிழித்தூம்பு, எலிமேடை, மயானக் கோல், நீர் குடித்த நிலம், தொய்யில் வதனம், வனக்குறவன், நிலம் சமைப்பவன், ஊர் மருத்துவச்சி முதலான சொற்கள்; நீராடும் பெண்களுக்குத் திசை எல்லாம் கண்கள், புருசன் இல்லாத வீடு பூட்டிக் கிடப்பதுபோல சூரியனற்ற வானம், மண்ணின் ஆன்மாவை அறிந்தவன், கதிர் அறுக்கையில் கையை அறுத்துக் கொண்டவன்போல, மலைக் கிராமத்துப் பச்சைக் கிளி வாழைக் குருத்தின் விரியா தலை மடல், ஆத்தி தேத்துனா அவுத்தும் காட்டுனா, அவன் வனக்குறவன், காடறிந்தவள், கல்வியில் இருப்பவள் பிள்ளையின் அழுகுரல் கேட்டு எழுந்ததுபோல போன்ற ஏராளமான சொல்லாட்சிகள் மனத்தை ஈர்க்கின்றன.எளிய நேரடியாகச் சொல்லும் இவரின் கதைகள் எளிதில் மனதில் ஒட்டிக் கொள்கின்றன.
-எழுத்தாளர்.அ.மார்க்ஸ்.
Be the first to rate this book.