"இன்னிக்கு ராவு மட்டும் இங்கனப் படுத்துட்டுப் போறமின்னான். நானும், பாவம் பாத்து அவனப் படுக்கச் சொல்லிட்டேன். இந்த டமார்ப் பய வந்து எங்கிட்டத் தரியாத்தனமா நின்னுட்டாம், பாத்துக்க. எப்பிடியோ அவர்கிட்ட பாசாங்கு வச்சிப் பேசி சமாதானப்படுத்திட்டாங்கும் வந்திருக்கேன். அந்த நெறுபறியிலதான் அவர்கிட்ட என் வேலையப் பத்திக் கேக்க மறந்துட்டென்"
இப்போ சமுத்திரம் அங்கப் படுத்திருக்கானா? இல்ல, டமார் அவன வெரட்டி வுட்டுட்டாரா?
"ச்ச, அவன் அங்கதான் வராந்தாவுல மேக்க ஓரமா ஒதுங்கிப் படுத்திருக்கான். டமாரு அவனப் படுக்க வுடலன்னா, நா டமார சும்மா வுடுவனாக்கும்?"
"என்ன 'சும்மா வுடுவனாக்கும்? எது முக்கிசமோ அதக் கோட்ட வுட்டுட்டு வந்திருக்கீரே.. நீரு என்ன மனுசன்? ஆரியக் கூத்தாடுனாலும் காரியத்துல கண்ணாயிருக்காண்டாமா? நம்ம வேலையப் பத்திக் கேக்கதுக்கு நமக்கில்லா அக்கிரிசி வேணும்"
அப்படி எதாச்சிம் விசியமிருந்தாத்தான் சொல்லியிருப்பாரே டமாரு ஒடனே எங்கிட்ட
"நாமக் கேட்டாத்தான அவரு சொல்லுவாரு. அழுதப் புள்ளதானய்யா பாலு குடிக்கும்"
"எத்தினியோ நாளு அவருகிட்ட நா மறுகி மறுகிக் கேட்டாச்சி அவர்கிட்ட நா இன்னும் அழாததுதான் பாக்கி. அப்படியே டமார்கிட்ட என் வேலயப் பத்திக் கேட்டாலும், அவரு புதுசா என்னத்தச் சொல்லிரப்போறாருன்னு நெனைக்க? வழக்கம்போல, எட்மாஸ்டரு மேலிடத்துக்கு எழுதி வுட்டுருக்காரு... கூடிய சீக்கிரம் ஒன் வேல பெர்மென்ட் ஆயிரும்வோய்'ன்னுதான் சொல்லுவாரு - அரச்ச மாவையே அரச்ச மாரி. அதத்தான சொல்லிக்கிட்டிருக்காரு.
Be the first to rate this book.