வெளிநாடுகளில் இருப்பதைப்போல் பெண்களுக்கான அரங்கு (Hall of Fame) உள்ள பெண்கள் அருங்காட்சியகம் ஒன்று உருவானால் நிவேதிதா நூல்களில் உள்ள அனைத்துப் பெண்களும் அதில் இருப்பார்கள். பல முயற்சிகள் எடுத்து. பலர் உதவியுடன் விடாமல் தரவுகளைத் தேடி, பலர் பார்வைக்குப் பொதுவெளிக்கு இவர் கொண்டுவந்திருக்கும் பல பெண்கள் இந்த நூலில் உண்டு, திரைப்படம். பல துறை மருத்துவம், இசைக் கலை, நாட்டியம், எழுத்து, திரைப்பாடல். கல்வி, விமானப் படை பணி. உளவுத் தொழில் பட்டயக் கணக்கு. செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கு, செவிலியர் பணி என்று பல துறைகளில் செயல்பட்ட பெண்களைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் உயிர்ப்புள்ள மொழியில் கூறுகிறார்.
நாம் அறிந்த எழுத்தாளரான திலகவதியுடன் நிவேதிதா செய்த மிக நீண்ட நேர்காணல் அவரைப் பற்றிய பல புதுத் தகவல்களைத் தருகிறது. அவரை மனம் திறந்து பேச வைக்கிறார் நிவேத்தா. அவரும் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்கிறார். மிகவும் மனந்தை நெகிழ்த்தும் நேர்காணல் இது.
-அம்பை
நிவேதிதா லூயிஸ், எழுத்தாளர், சமூக, பெண்ணிய ஆய்வாளர், வரலாற்றாளர், ஊடகவியலாளர், இணை நிறுவனர் ஹெர் ஸ்டோரிஸ். வரலாறு, தொல்லியல், இனவரைவியல், இனவரைவுத் தொல்லியல் உள்ளிட்ட தளங்களில் கடந்த 9 ஆண்டுகளாக இயங்கிவருபவர். உள்ளூர், மறைக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுபான்மைச் சமூகத்தின் வரலாற்றை. பண்பாட்டை முனைப்புடன் மக்களிடம் கொண்டு செல்பவர். 2024-ம் ஆண்டு பெண்ணியச் செயல்பாட்டுக்கான தேசிய லாட்லி ஊடக விருதையும், 2021-ம் ஆண்டு லாட்லி பிராந்திய விருதையும் வென்றுள்ளார். இவரின் 'ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை' நூல் சென்னை மற்றும் கோழிக்கோடு பல்கலைக்கழகங்களில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. இவரின் 'வடசென்னை வரலாறும் வாழ்வியலும்' 2022-ம் ஆண்டு எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயத்தின் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதையும் தமுஎகசவின் சிறந்த தொன்மைசார் நூலுக்கான கே. முத்தையா விருதையும் பெற்றுள்ளது. முதல் பெண்கள், அறியப்படாத கிறிஸ்தவம், கலகப் புத்தகம், கிறிஸ்தவத்தில் ஜாதி. 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் பாதை அமைத்தவர்கள், பெயரற்றவர்களின் குரல் உள்ளிட்ட 14 நூல்களை எழுதியுள்ளார்.
Be the first to rate this book.