'கொர்த்தஸாரின் தலைசிறந்த படைப்பு... ஸ்பானிய அமெரிக்காவின் முதல் சிறந்த நாவல்.'
- டைம்ஸ் லிட்டெரரி
ஹாப்ஸ்காட்ச்... லத்தீன்-அமெரிக்கக் கற்பனைக்கும் சமகால உலகத்திற்கும் இடையிலான சந்திப்பின் உண்மையான சாத்தியத்தைக் குறிக்கிறது.'
- கார்லோஸ் ஃபுயந்தெஸ்
'இலக்கியச் சாதுரியமும் உச்சபட்ச சாதனையும் இதோ இங்கே."
- கார்டியன்
20ஆம் நூற்றாண்டு இலக்கியத்தின் ஆகச்சிறந்த படைப்பான ஹூலியோ கொர்த்தஸாரின் பாண்டியாட்டம் (ஹாப்ஸ்காட்ச்-1963) பாரம்பரியக் கதைசொல்லலை மீறும் முயற்சி. நேரியலல்லாத முறையில் சொல்லப்படும் கதை – தொடர்ச்சியாக வாசிப்பது மூலமாக அல்லது பரிந்துரைக்கப்பட்ட வரிசையைப் பின்பற்றி அத்தியாயங்களுக்கிடையில் "பாண்டியாட்டம்" போலத் தாவுவதன் மூலமாக, வாசகர்களைப் பலவழிகளில் கதையை வழிநடத்திச்செல்ல விடுக்கப்படுகிற அழைப்பு.
இந்த நாவல் பாரிஸின் பொஹீமியன் தெருக்களுக்கும் பியூனஸ் அயர்ஸின் குழப்பமான யதார்த்தத்திற்குமிடையில் அலைந்து திரியும் அறிவுஜீவியான ஹொராசியோ ஒலிவேராவைப் பின்தொடர்கிறது. அர்த்தத்திற்கான அவனது தேடல் துண்டு துண்டாக, கிட்டத்தட்ட ஜாஸ் இசையின் தாளத்தைப்போன்று வெளிப்படுகிறது. அதிலுள்ள காதல், தத்துவம் மற்றும் இருத்தலியல் ஏக்கம் புனைகதைக்கும் வாழ்க்கைக்குமிடையிலான எல்லைகளை மங்கச் செய்துவிடும்.
வாசிப்பின் சாரத்திற்குச் சவால் விடும் நாவலான பாண்டியாட்டம் கலகத்தை உருவாக்கும் ஒரு படைப்பு. இந்தப்பிரதி எழுத்தாளர்களை ஊக்குவித்து, தன் எல்லையற்ற சாத்தியக்கூறுகளால் வாசகர்களையும் வியப்பிலாழ்த்தும்.
Be the first to rate this book.