‘சமநிலை’ பார்ப்பது கணக்காளனின் வேலை. விமர்சகருடையதல்ல. தராசும் கணக்கு வழக்கும் குமாஸ்தாவின் மேஜையில் இருக்க வேண்டியவை. கலையின் முன் அவற்றுக்கு இடமில்லை. இந்த நடுநிலைமை என்பதே ஒரு மாபெரும் அபத்தம்.
உண்மையான விமர்சனம் என்பது ஒற்றைக் காலில் தவம் செய்யும் பரமயோகியின் வெறி. அல்லது, ஸ்பானிய மங்கையின் ஃபிளமெங்கோ சுழற்சி. அதற்கு அழகியலின் மீதான தீராத தாகம் மட்டும் போதாது. அந்த அழகியலின் உடற்கூறுகளைக் கிழித்துப் பார்க்கும் ஒரு குரூரமான நுண்ணரசியல் அவதானிப்பும் ஒருங்கே வேண்டும்.
கலையின் உச்சம் உங்களை ஒரு வலிப்பு வந்ததுபோல சிலிர்க்க வைக்க வேண்டும். அந்தப் பரவச நிலையிலிருந்தும், அந்த அவதானிப்பின் குரூரத்திலிருந்தும் எழுதுவதே விமர்சனம். அது ஒற்றைக் காலில் நின்றாலும் சரி, தலைகீழாக நின்றாலும் சரி. மற்றதெல்லாம் வெறும் சக்கைகள். தூக்கி எறியுங்கள்.
Be the first to rate this book.