நாவலாசிரியர் பெ.மகேந்திரன் 'வெள்ளாமை', 'நிறைகுளம்' என்னும் இரண்டு நாவல்கள் மூலம் எழுத்துலகுக்கு நன்கு அறிமுகமானவர். முதல் நாவலிலேயே சிறந்த படைப்பை அளித்திருந்தார்.
'வெள்ளாமை'யில் கரிசல் வட்டாரத்தில் புதிய தொழில்களின் வரவுகளுக்கிடையே வேளாண் தொழிலை ஒருவித வைராக்கியத்தோடு விடாமல் மேற்கொண்டு வாழ்ந்த ஒரு பெரியவரையும் அவரைச் சூழ்ந்தவர்களையும் பாத்திரங்களாக வைத்து ஒரு காப்பியம் போலச் செதுக்கியிருந்தார். அதன் மூலம் கரிசல் மண்ணின் வாழ்க்கை சார்ந்த எல்லா அம்சங்களையும் கதையோடு பின்னி அதன் இயல்பு மாறாமல் வெளிப்படுத்தியிருந்தார்.
'நிறைகுளம்' நாவலில் அதே கரிசல் மண்ணின் சம்சாரிகள் வறட்சியையும் அரிதாகப் பெய்யும் பெருமழையையும் எப்படி எதிர்கொண்டு உழவுத் தொழிலைப் பேணிக்காக்கிறார்கள் என்பதோடு அதற்கான யதார்த்தமான தீர்வையும் கதை மூலமே முன் வைக்கிற உத்தியைக் கையாண்டிருக்கிறார். கூடவே கதையோடு பின்னிய கிளைக்கதைகள் நெகிழ்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளன. நாவலை எழுதிய ஆசிரியரே கோட்டோவியங்கள் வரைந்தது கூடுதல் சிறப்பு.
பேனாவின் டைரி அவருடைய கருத்தாழம் மிக்க நினைவுக் குறிப்புகளின் தொகுப்பு. நகைச்சுவை இழையோடும் அவரின் நடை தனித்துவமானது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சிறுகதை போல அமைந்திருப்பது அவருடைய எழுத்தாற்றலுக்குச் சான்று.
Be the first to rate this book.