Dementia (நினைவுமறதி) யின் தாக்கத்தைச் சந்திப்பது எளிதல்ல. தன்னுடைய மகன் யார் என்றே தாய்க்குத் தெரியவில்லை. அதைப் புரிய வைப்பதற்கு பிள்ளைகளாலும் முடியவில்லை. தன் வாழ்நாளெல்லாம் ஆயிரமாயிரம் பேருக்கு மருத்துவம் பார்த்தவருக்கு யாரும் நினைவு மருத்துவம் பார்க்க முடியாத நிலை. இது விதியென்பதா முதுமையின் தீராத விளையாட்டுகளில் ஒன்று என்பதா! தன் அனுபவங்களின் வழியே இதைக் காட்சியாகவும் கதையாகவும் பகிர்கிறார் சஞ்சயன், நினைவு மறதி (Dementia) நமக்கு வந்தால் நாம் யார், எதுவாக இருக்கிறோம் என்றே தெரியாது.
நம்மைச் சுற்றியுள்ளவர்களும் உறவுகளும் தாங்கள் யார். தமக்கும் நமக்கும் என்ன உறவு என்பதைச் சொல்லவோ காட்டவோ முடியாமல் போகும். சஞ்சயனின் அம்மாவுக்கு நினைவு மறதி, பிள்ளைகள் வெளிநாடுகளில் தொலைதூரத்திலிருந்துகொண்டு அம்மாவுடன் பேசுவதற்குச் சிரமப்படும். தாம் யார் என்பதை அறிமுகப்படுத்தக் கஸ்டப்படும் நிலையைச் சொல்லுகிறது இந்தப் புத்தகம், சுய அனுபவப் பதிவாக எழுதப்பட்ட இந்தக் கதைகளில் நம்முடைய பதட்டத்தைக் காண்கிறோம்.
நெஞ்சை உருக்கும் வார்த்தைகளில் இதயத்தை உலுக்கும் வாழ்க்கையை எழுதியுள்ளார் சஞ்சயன் பேரவலமாகவும் பெருந்துயராகவும் நீளும் இந்தக் கதைகள் நம்மைப் பதைப்படைய வைக்கின்றன. நினைவு மறதி எப்படியெல்லாம் விளையாடுகிறது என்பதை மிகச் சுவாரசியமாகப் படிக்கும் நாம் உள்ளூர் கலங்குகிறோம். பெருந்துயராகவும் வேடிக்கையாகவும் விளையாட்டுப் போலவும் சொல்லப்படுகிறது. தமிழில் இது புதிய முயற்சி.
-கருணாகரன்
இலங்கை
Be the first to rate this book.