உங்கள் அன்பு மாணவன் முத்துக்குமரன் எழுதும் கடிதம். உங்களுக்கு உங்கள் பெற்றோர் வைத்த பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எங்களுக்கு எப்போதும் நீங்கள், 'ரோஜாப்பூ மிஸ்'தான். உண்மையில் பிள்ளைகளுக்கு பிரியங்களுடன் பாடம் சொல்லித்தரும் பள்ளிக்கூட டீச்சர்களின் காதோரத்துக் கூந்தல் அலையில் ஊஞ்சல் ஆடுவதற்காகத்தான் இந்த உலகத்தில் ரோஜாப்பூக்கள் பூக்கின்றனவோ!
பூ என்பது பூ மட்டுமா? அது ஒரு புன்னகை; பழைய ஞாபகத்தின் புதிய வாசனை; மண்ணில் உதிரும் வானவில் துண்டு; கடவுள் எழுதிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கம்; யாரும் படிக்காத, படித்தாலும் புரியாத பிரபஞ்சத்தின் கையேடு; செடிகள் வரையும் சிறு வண்ணக் குறிப்பு; மண்ணுக்குள் புதைந்தபடி வெளி உலகுக்கு வேர்கள் அனுப்பும் வாசனை மின்னஞ்சல்! பூக்களின் இதழ்களில் குழந்தைகளின் முகத்தையும், குழந்தைகளின் முகத்தில் பூக்களின் இதழ்களையும் பார்க்கத் தெரிந்தவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். இரண்டையும் வாடாமல், உதிராமல் பார்த்துக் கொள்பவன் மிகப்பெரும் பாக்கியவான்!
Be the first to rate this book.