அர்த்தத்தில் இருந்து விடுபடுங்கள். உங்கள் மனம் உங்களைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஒரு கனவு. இப்போது உங்கள் மனதைச் சாப்பிடுங்கள். என்பாரே, பெண் எழுத்தை உருவாக்குவதில் அக்கறை கொண்டிருந்த கேத்தி அக்கர். அப்படி ஒரு திகைப்பை, இவரது மொழியில் அனுபவிக்க முடிந்தது. 'காயப்பட்ட மான் மிக உயரத்தில் பாய்கிறது' என எமிலி டிக்கன்சன் கூறுவதுபோல, அம்பிகாவின் பெண் மொழி உயரப் பாய்கிறது. இவரது கவிதைகளில் காமம் ஓர் அரசியலாக விரவிக் கிடக்கிறது. நுண் அரசியல் என்றில்லை பேருரு அரசியலையும் செறிவாக எழுதுகிறார். எல்லா நற்பண்புகளிலும் தைரியம் மிக முக்கியமானது, ஏனென்றால் தைரியம் இல்லாமல், வேறு எந்த அறத்தையும் தொடர்ந்து செய்ய முடியாது என்கிறார் மாயா ஏஞ்சலோ. அந்த, தைரியம் என்கிற நற்பண்பை 'நிலம் வீடு திரும்பிவிட்டது' தொகுப்பின் வழி, மீண்டும் ஒருமுறை கவிஞர் அம்பிகா குமரனிடம் காணமுடிகிறது. அம்பிகா குமரன் நம் காலத்தின் குறிப்பிடத்தக்கப் பெண் கவி.
- கரிகாலன்
அம்பிகா குமரனின் கவிதைகள் அன்றாட வாழ்வு தரும் வாதைகள் மற்றும் கொண்டாட்டத்தில் இருந்து உருப்பெறுகின்றன. பெண் எனும் தன்னிலை இவ்வாழ்வு குறித்து கொண்டிருக்கும் தீவிரமான மன உணர்வுகள் இக்கவிதைகள் எனலாம். தன்னிலை அகம் சமூகம் எனும் பேரகத்தோடு புழங்கும்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகள், சவால்கள், வலிகள் இதில் பதிவாகின்றன. ஆனால், அது குறித்த பெரிய புகார்கள் இவற்றில் இல்லை. இவை இப்படியிருக்கின்றன என்கிற ஒரு பார்வையை சாட்சிபூதமாக முன்வைப்பதாக உள்ளன. அன்றாடத்தின் வாழ்வில் இடம் பெறும் அநேக பருப்பொருட்கள் இவர் கவிதையின் கருப்பொருட்களாக மாறி நிற்கின்றன. இந்தக் கருப்பொருட்களோடு மாந்தர் கொள்ளும் உணர்வுப்பூர்வமான உறவு இவர் கவிதையின் உட்பிரதியாய் இருக்கிறது. இந்தப் பண்பு இக்கவிதைகளுக்கு ஒருவித சமகாலத்தன்மையை வழங்குகிறது.
-இளங்கோ கிருஷ்ணன்
Be the first to rate this book.