இங்கு ஒரு பெண் எழுதுவதாலேயே அந்தப் பிரதியை விமர்சிக்க ஓராயிரம் காரணங்களைத் தூக்கிக் கொண்டுவருபவர்கள் அதற்குள் இருக்கும் சிறப்புகளைப் பாராட்ட மனமின்றித் தடுமாறுகிறார்கள். காலங்காலமாக வாழ்விலும் புனைவிலும் தன்னை நிறுவ ஆண்களைவிடப் பெண்களே அதிகம் மெனக்கெட வேண்டியுள்ளது. ஆனால் எஸ்தர் ராணியின் படைப்புகள் அப்படியானவை அல்ல. அவர் தனது கவிதைகளிலும், கதைகளிலும் மெல்லிய சாட்டைகளைச் சுழற்றுபவர். எழுதுவதோடு தன் வேலை முடிந்துவிட்டது என்று பிரதியைப் பொதுவில் வைத்துவிட்டு அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவார். தான் பெண் என்பதற்காக எந்தச் சலுகைகளையும் எதிர்பார்க்காத அவரது எழுத்துப் பயணம்தான் வேரலுக்கு அவரைக் கொண்டு வந்து சேர்த்தது.
நேசத்தின் பிறழ் தீர்க்கதரிசனங்கள் எஸ்தரின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இலைகளைப் பச்சையும் மஞ்சளுமாய்ப் பாதி பழுக்க வைத்து அவற்றின் உதிர்தலை இன்னும் கொஞ்சம் தள்ளிப்போட நினைக்கும் மரத்தைப் போல இக்கதைகள் மாய எதார்த்த உலகின் இருள் கவிந்த சிறு வெளிச்சத்தை நமக்குத் தரிசிக்கத் தருகின்றன. இப்பிரபஞ்சம் எதனை நோக்கி வேக வேகமாக நகர்ந்தாலும் அன்பின் நிழல் அதைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. மனித வாழ்வின் தேடலும், ஓட்டமும், அவசரமும் குறைந்த சிறு இளைப்பாறல்தான் இன்னும் நம் நம்பிக்கையையும், நடையையும் வேகப்படுத்துகிறது. எஸ்தரின் இந்தக் கதைகள் முதுகோடு முதுகைச் சாய்த்துக்கொண்டு முகம் பார்க்காமல் பேசிக்கொண்டே ஓர் இரவைக் கடக்கும் காதலர்களின் உணர்வையும், அவன் எழுந்து சென்ற இடத்தில் இருக்கும் வெப்பம் குறையும் முன் அதன் மீது இதழ் பதிக்கத் தவிக்கும் பிரிவின் உச்சத்தையும், உறவுச் சிக்கல்களில் விழுந்து, அதன் முடிச்சுகளை விடுவிக்க முடியாமல் தவிக்கும் விரக்தியையும், அன்பின் பிண்டமும், சதையும் எவர் வடிவிலாவது உரசிச் செல்லும் அந்தத் தீர்க்க தரிசனங்களையும் சற்றும் பிசகாமல் வாசகர்களுக்குக் கடத்துபவையாக இருக்கின்றன. என்னை ஈர்த்த இந்தக் கதைகள் உங்களையும் ஈர்க்கலாம்.. படித்துவிட்டு உரையாடுவோம்..
- அம்பிகா குமரன், பதிப்பாசிரியர்
Be the first to rate this book.