அப்படி ஒன்றும் கெட்டவளும் அல்ல அந்தச் சின்னம்மா. தன் வயிற்றில் பிறந்தவள் அல்ல என்பதற்காக நளினியைக் கடுமையாக நடத்தினாள் அவள் என்று சொல்ல முடியாது. தன் வயிற்றில் பிறந்திருந்தாலும் அவள் அவ்வளவு கடுமையாகவே தான் இருந்திருப்பாள். மூத்தாள் பெண் என்பதற்காக அவளுக்குத் தலை வாராமல், நல்ல ஆடை உடுத்திவிடாமல் இருந்தாள் என்றும் சொல்வதற்கில்லை. தன்னைச் சிங்காரித்துக் கொள்ளவே நேரம் போதவில்லை சின்னம்மாவுக்கு. தன் பெண்ணையோ, மூத்தாள் பெண்ணையோ சிங்காரிக்க அவளுக்கு நேரம் எங்கிருந்தது.
சின்னம்மாவைச் சொல்வதில் லாபம் இல்லை. மனித சுபாவமே இதுதான் போலும். தீவிரமாக, சிந்தித்துக் கண்டு பிடிக்கக்கூடிய காரணம் எதுவும் இல்லாமலே. சில காரியங்கள் நடந்து வருகின்றன; சிலர் உறவுகள் பாதிக்கத்தான் பாதிக்கப்படுகின்றன. அதைப்பற்றி ஆராய்வது அவசியம் இல்லை.
ஆனால், நளினியைப் பற்றி அவள் கண் மறைவாக இருக்கும்போது கெடுதியே நினைக்காத சின்னம்மா, அவள் கண்ணெதிரே வந்தவுடன் காளிமாதிரியாகி விடுவாள்! அவள் உள்ளத்திலே ஆத்திரம் ஏதோ குடிகொண்டு மூண்டு மூண்டு எழும்.
- நாவலில் இருந்து
Be the first to rate this book.