நாரத ராமாயணத்தில் கிண்டலுக்கும் நகைச்சுவைக்கும் அப்பால் புதுமைப்பித்தனை வதைக்கும் துக்கத்தைக் காண முடியும். மதத்தால் பயன்படுத்திக்கொள்ளப்படும் மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இதிகாசமும் கற்பனையும் இணைவது யதார்த்தத்தை முன்னிலைப்படுத்துவதற்காகத் தான். பெயர்களை வெறும் பாத்திரங்களாகக் கொள்ளாமல் caricature ஆகவும் குறியீடுகளாகவும் பார்த்தால் படைப்பின் பரிமாணங்கள் இடம், காலத்தை மீறி உண்மைகளைச் சொல்லும். அயோத்தியும் அயோத்தி அல்ல. 2021இல் நம்மையும் காண முடியும்.
- என். சிவராமன், முன்னுரையில்
தன்வரலாற்றை சுய எள்ளலுடன் கூறும் ‘புதிய கந்த புராணம்’ நாட்டுப் படலம், ஆற்றுப் படலம், நகரப் படலம், திருஅவதாரப் படலம், திருமணப் படலம், உலாவியல் படலம் எனப் புராண அமைப்பைக் கைக்கொண்டு காலனியாதிக்க காலத்தில் ஒரு சாதாரணக் குடிமகனின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. ‘இலக்கிய மம்ம நாயனார் புராண’மும் இதுபோலவே அமைந்துள்ளது. இவை இரண்டும் மிகச் சுருக்கமாக அமைந்திருக்க, அவருடைய ‘நாரத ராமாயண’மும், அதற்குப் பிற்பகுதியான ‘ரகுவம்ச பராக்கிரம பர்வ’மும் இராமாயண, பாரத இதிகாசங்களைப் பகடி செய்து, இந்திய வரலாற்றை வேறு கோணத்தில் பார்க்கின்றன. புதுமைப்பித்தனின் நையாண்டிப் பார்வைக்குப்
பகடி மிக எளிதாகவும் இயல்பாகவும் கைவந்திருப்பதை இவற்றில் காண முடிகின்றது.
- ஆ. இரா. வேங்கடாசலபதி, ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ நூலில் ‘தமிழில் பகடி இலக்கியம்’ என்ற கட்டுரையில்.
‘நாரத ராமாயண’த்தில் காந்தியை இளைய பரதன் என்று குறிப்பிட்டு, அவருடைய கதர் இயக்கம், கைராட்டை இயக்கம் பற்றியும் சிறையுள் இருக்கும்போதே திடீரென்று அரிசனங்களுக்கு எதிரான தீண்டாமை ஒழிப்பிற்காகக் காந்தியார் 8-5-1933-ல் தொடங்கிய இருபத்தொருநாள் உண்ணாவிரதத்தைச் சிறைக்குள் தொடராதபடி அவரை ஆங்கில அரசு விடுதலை செய்தது பற்றியும் படுகிண்டலாக எழுதியுள்ளார்.
- ராஜ் கௌதமன், ‘புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ்’ நூலில் ‘ஆசார சீர்திருத்தமும் காந்தியமும்’ என்ற கட்டுரையில்.
Be the first to rate this book.