நாகபவானியின் கதையே நாகமும் பவானியும் தான். நண்பர்களோடு திருவண்ணாமலை போயிருந்த போது, மேல்மலையனூர் பற்றி அங்கொருவர் சொன்ன ஒருவரித் தகவல்தான் தூண்டுகோல். கதைக்கும் அதற்கும் உள்ள தொடர்பு 0.005% தான். அந்த வரித்தகவலுக்குச் சேலை கட்டி, ஜடை போட்டு, பவுடர் போட்டு, பொட்டு வைத்து, கண்மை தீட்டி, நகைநட்டுகள் அடுக்கி எழுதியதுதான் நாகபவானி.
கர்ண ஜோதிடம் என்ற வகை இருக்கிறதா என்றே எனக்குத் தெரியாது. இதுவும் ஒருவரித் தகவலை வைத்து புனையப்பட்டதுதான். தெரிந்ததையெல்லாம் தோன்றியதையெல்லாம் கலந்துகட்டி பொம்மை செய்திருக்கிறேன். உங்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கைதான். இந்தக் கதையில் செல்லக்கண்ணு என்ற கதைமாந்தரை வைக்க வேண்டும் என்ற எண்ணம் பாதி எழுதும்வரை இல்லை. திடீரென்று நடிகர் சுருளிராஜன் நினைவு வர, அவரே அந்தப் பாத்திரமாக வந்து பேசுவதாய்த் தோன்ற, அப்படியே எழுதிவிட்டேன்.
மூன்றாவதாக ஒரு குறும்புதினமும் இருந்தால், புத்தகத்தின் அளவுக்கு நன்றாக இருக்குமென்று கவிஞர் மதுமிதாவின் எண்ணம். சரிதானென்று எனக்கும் தோன்றியது. அப்படி உருவானதுதான் வேதாளத்தின் அடாவடிக் கதைகள். எழுத்துக்கு எலும்பில்லை. எப்படியும் வளையுமென்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். வேறுவழி!
தூத்துக்குடியில் பிறந்து சென்னையின் எண்ணிக்கையில் கலந்துவிட்ட ஜிரா... எழுதப் படித்துக் கொண்டிருப்பவன். வலைப்பூ காலம் தொடங்கி, எழுத்தோடும் தமிழ்க் கூட்டத்தோடும் தொடர்ந்து பயணிப்பவன். சங்கத்தமிழ், சிலப்பதிகாரம், திருப்புகழென்று செவ்விலக்கியம் மட்டுமல்ல... மக்கள் இலக்கியத்திலும் எளிய எழுத்துகளிலும் மேய்ந்து கொண்டிருப்பவன். முரண்களின் அரண். இவன் எழுதுவதெல்லாம் இவனுக்கு இவனே சொல்லும் கதைகள்தாம். இலக்கியத்துக்கு இலக்கணமில்லை என்று நம்புகிறவன். திரைப்பாடல்களை வைத்து 'நாலு வரி நோட்டு', சிறுகதைத் தொகுப்பாக 'என் கொங்கை நின் அன்பர்', புதினமாக 'காமரூபவல்லி' பதிப்பித்த பிறகு கொண்டு வந்திருக்கும் சிறுகதைத் தொகுப்பு 'சுவீட் காரம் காப்பி'.
Be the first to rate this book.