ப்ளாடிபஸ் முட்டைகள்
கையளவு வானம்
150 கிராம் மேகங்கள்
ஒரு தேக்கரண்டிக் கடல்
இவை இருந்தால் போதும்
இன்றைய இரவுணவுக்கு
டயட்டில் இருப்பதால்
திமிங்கலங்களையோ சுறாக்களையோ தின்பதில்லை
கடற் பாலூட்டி முட்டைகள் கிடைத்தால் ருசி பார்க்கலாம்
நள்ளிரவு வரை விழித்திருக்கலாகாதென மருத்துவர்கள் எச்சரிக்கை
பதினோரு மணிக்காவது தூங்கிவிட வேண்டும்
டாலியின் ஓவியங்களைவிடவும் அபத்தக் களஞ்சியங்களான
கனவுகளை என்ன செய்வது
சட்டகத்தில் அடைத்துச் சுவரில் மாட்ட முடிந்தாலாவது தேவலாம்
அழகியல் அருங்காட்சியமாகவே ஆகியிருக்கும் என் வீடு
எதார்த்தத்திற்கு ஜென்ம விரோதிகளான
இந்த மூளைதின்னிகளை மண்டைக்குள்ளிருந்து
வெளியே கொட்டாமல் ஒரு நாளும் என்னால் உறங்க முடிவதில்லை
நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள் சக கவிஞர்களே?
Be the first to rate this book.