ஓர் ஆசிரியரின் பெயர் தாங்கிப் பிற்காலத்து வருவார் இயற்றும் நூல்கள் முன்னைய ஆசிரியரின் படைப்பாகவே கருதப்படுதல் உண்டு என்பதற்கு அகத்தியர் பெயரால் உலவும் பல நூல்களைச் சான்று காட்டியுள்ளார். வேறு பெயர் உடைய பிற்காலத்தவர், தாம் இயற்றும் நூல் நன்கு மதிக்கப்படல் வேண்டும் என்ற ஆசையால், புகழ் பெற்ற புலவர் ஒருவரின் பெயரைப் பொறித்தலும் உண்டு என்பதற்கும் அவைகள் சான்றுகள் ஆகும். ஆசிரியர்களின் பெயர்களில் மட்டும் அல்லாமல், சிற்றெட்டகம் எலிவிருத்தம் முதலான சில நூல்களின் பெயர்களிலும் மயக்கம் உண்டு, கலைக்கோட்டுத் தண்டம் முதலாய சில நூல்களின் பெயர்கள் ஒரு காரணம் பற்றி அமைய, அவை வேறு காரணம் பற்றி அமைந்தன எனப் பிற்காலத்தார் மயங்கியதும் உண்டு. தகடூர் யாத்திரை முதலாய சில நூல்கள் பழங்காலத்தன ஆயினும், அவற்றின் உண்மை அறியாமல் பிற்காலத்தன எனப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை முதலானோர் மயங்கி எழுதியதும் உண்டு. இந்நூலாசிரியர் மறைந்து போன தமிழ் நூல்களைப் பற்றி பற்றிய குறிப்புக்களை எல்லாம் பயன்படும் வகையில் தொகுத்துத் தந்த அளவில் நிற்காமல், மேற்குறித்த தடுமாற்றங்களையும் மயக்கங்களையும் இயன்றவரையில் தீர்க்க முயன்றுள்ளார்; முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார்.
ஒருமுறை ஓர் இடத்தில் பார்த்துவிட்டு வந்த நூல், மறுமுறை அவ்விடத்தில் சென்று பார்க்க முயலும்போது காணாமற்போகும் விந்தைகள் இந்நாட்டில் நிகழ்ந்தன உள இந்நிலையில், மறைந்துபோன தமிழ் நூல்களைப் பற்றி இன்று கிடைக்கும் குறிப்புக்களையேனும் விடாமல் தொகுத்து ஒரு நூல்வடிவில் தந்த உதவிக்காகத் தமிழகம் இந்நூலாசிரியர்க்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டதாகும்.
-மு.வரதராசன்
Be the first to rate this book.