தமிழ் மண்ணில் தோன்றிய ஆன்றோர்களும் சான்றோர்களும் சமூக ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் விரும்பியவர்கள், அதற்காகப் பாடுபட்டவர்கள். அப்படிப்பட்ட ஓர் ஆன்றோர்தான் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள். ‘ரெங்கநாதன்’ என்ற இயற்பெயர் கொண்ட குன்றக்குடி அடிகளார், பள்ளிப் பருவத்திலேயே தமிழ் மீது தனிப் பற்றுகொண்டு பயின்றவர். சிறு வயதிலேயே ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டு பணியாற்றியவர். பின்னர் குன்றக்குடி ஆதீனம் தலைமைப் பொறுப்பேற்று ஆன்மிகம் மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கத்துக்கும் நற்பணிகளுக்கும் பாடுபட்டவர். தன் இளமைப் பருவம் பற்றியும் தான் குன்றக்குடி ஆதீனத்துக்கு வந்தது எப்படி என்பது பற்றியும் ஆனந்த விகடன் இதழில், 1992-93 ஆண்டுகளில் குன்றக்குடி அடிகளார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சமயப் பணியுடன் கூடிய சமுதாயப் பணி, நேரு, வினோபாபாவே, பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோருடனான தன் நட்பு பற்றியும், குறிப்பாக பெரியாருடனும் தி.க.வினருடனும் முதலில் ஏற்பட்ட மோதல் போக்கு, பின்னர் தனக்கும் பெரியாருக்கும் ஏற்பட்ட நட்பு ஆகியவற்றைப் பற்றி அடிகளார் இதில் குறிப்பிட்டிருக்கிறார். குன்றக்குடி அடிகளார் குறிப்பிடும் மண்ணையும் மனிதர்களையும் இனி அறிவோம்.
Be the first to rate this book.