கவிஞர் ப்ரியம் கவிதைகளை வாசிக்கும்போது, பொங்கி பெருகும் நதி எங்கிருந்து தோன்றி இவ்வளவு வேகமாக பாய்ந்து வருகின்றது என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. அது பாயும் வேகமும் செல்லும் திசைகளும் முன் தீர்மானிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. முங்கி குளிக்கவும் மூழ்கி களிக்கவும் நீந்தி அடக்கவும் துணியாத மனம் கூட ஒருவாய் அள்ளிப் பருகாமல் விலகிவிட முடியாது. ரூமியின் சொற்களுக்கு பொருத்தமான கவிதைகள் ப்ரியத்தின் கவிதைகள்.
இந்த நதியின் கரைகளில் தாம் யாமம், வைகறை, விடியல், நண்பகல், ஏற்பாடு, மாலை என பொழுதுகள் சுழல்கின்றன. கபிலனும், நப்பூதனும், இளநாகனும், அம்மூவரும் நடத்தும் தேன்பந்திக் கவிதைகள் தாம் இவர் கவிதைகள்.
மூலம் மறைக்கப்பட்ட இந்த மர்மநதி தலையில் மலையைத் தாங்கி பாதங்களை கடலில் துழாவுகிறது.நதியின் மேற்கரையில் காடு. கீழ் கரையில் நெல்விளை நாடு. மூச்சடக்கி மூழ்கி மேலெழுந்தவர் உள்ளங்கைகளில் அவரவர் அள்ளும் திறனுக்கு ஏற்ப, காமமும் பக்தியும் அனுபவிக்கமட்டுமே. முழுமையாக விவரித்து வென்றவர் எவருமில்லை. நிஜமான இலக்கியமும் அப்படித்தான். இந்நூல் அவ்வகையறா.இவர் கவிதைகளில் மாயோனும் சேயோனும் வேந்தனும் வருணனும் வரிசைக் கட்டி நிற்கிறார்கள். புணர்ச்சியும் இருத்தலும் பிரிதலும் ஊடலும் கூடலும் நாட்குறிப்பேட்டின் நினைவு குறிப்பு சுளாகின்றன. அத்தோடு நில்லாமல் கொஞ்சமாக புறத்திணையின் வாகைத் திணையும் நினைவுகூறப்படுகிறது. குளத்தில் மலர்ந்த தாமரைகளில் தேனெடுத்து உச்சியில் வளர்கின்ற சந்தன மரத்தில் கூடுகட்டி சேகரிக்கும் வண்டினை- நாடனை நமது சங்கத் தமிழ் பேசுகிறது. ப்ரியம் கைகள் வரையும் நவீனத் தமிழிலும் மலைகளின் உயரம் காணத் தெரிகிறது.
-வே. எழிலரசு
Be the first to rate this book.