சிவபெருமானின் புகழைக் கூறும் சைவத் திருமுறைகள் பன்னிரண்டு. அத்திருமுறைகள் தெய்வமணம் கமழ்வன. அவை சிவத்தின் மேல் தெய்வம் வேறில்லை என்ற உண்மையை விளக்குவன. பன்னிரெண்டு திருமுறைகளில் முதல் ஏழும் தேவாரம் என்னும் பெயருடையவை. திருவாசகமும் திருகோவை யாரும் எட்டாம் திருமுறை, திருவிசைப்பா, திருப்பால்லாண்டு இவை ஒன்பதாம் திருமுறை திருமூலரின் திருமந்திரம் பத்தாம் திருமுறை. ஆலவாய் இறைவன் திருமுகப் பாசுரம் முதல் காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள் நாயனார் முதலிய பலர் பாடிய நூல்களின் தொகுதி பதினோராம் திருமுறை, பெரியபுராணம் பன்னிரெண்டாம் திருமுறையாகும்.
முதல் இராஜராஜ சோழன் காலத்தில் நம்பியாண்டார் நம்பி என்பார் பதினொரு திருமுறைகளை வகுத்தார் என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. அம்மன்னன் காலத்துக்குமுன் தேவாரப் பதிகங்கள் முதலியன பலவாறாகப் பாடப்பெற்று வந்தன. அவற்றைக் கண்டெடுத்து ஒழுங்குபடுத்தித் தொண்டு புரிந்தவன் இராஜராஜ சோழன்.
இந்தப் பன்னிரு திருமுறைகளில் நான்கு, ஐந்து, ஆறு என்னும் அடுத்த மூன்று திருமுறை களைப் பாடியவர் நாவுக்கரசர். அப்பர் என்று அழைக்கப்படும் நாவுக்கரசரின் முதற்பதிகம் திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" எனத் தொடங்கும் பதிகமாகும். இவரது நான்காம் திருமுறை பண்ணுடனும், ஐந்தாம் திருமுறை திருக்குறுந்தொகை என்னும் யாப்பிலும், ஆறாம் திருமுறை திருத்தாண்டகம் என்னும் யாப்பிலும் அமைந்துள்ளன. இவரது பாடல்கள் தேவாரம் என்றே வழங்கப் பெற்றுள்ளன.
Be the first to rate this book.