கம்ப ராமாயணம் என்பது பக்தி இலக்கியமோ தமிழ்க் காவியமோ மட்டுமல்ல. அள்ள அள்ளக் குறையாத பெரும் செல்வக் குவியல்களைக் கொண்ட பேரதிசயம் அது. அறிவியல், அரசியல், சமூகவியல் என்று தொடங்கி இன்று நாம் நவீனம் என்று கருதும் பல துறைகளுக்கான ஆரம்ப வித்துகளை கம்பர் அன்றே விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
சோம. வள்ளியப்பனின் இந்நூல் கம்ப ராமாயணத்தில் புதைந்து கிடக்கும் மேலாண்மைச் சிந்தனைகளை அகழ்வாய்ந்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறது. நமக்கான இலக்குகளை எவ்வாறு நிர்ணயித்துக்கொள்வது, அவற்றை நோக்கி எவ்வாறு பயணம் செய்வது, பயணம் செய்வதற்குத் தகுந்த பயிற்சிகளை எங்கிருந்து பெறுவது என்று தொடங்கி தனி நபர்களுக்கும் மேலாளர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் பல ஆழமான, அற்புதமான ஆலோசனைகளை இந்நூல் நமக்கு அளிக்கிறது.
நவீன நிர்வாகவியல் கோட்பாடுகளை கம்பனின் வரிகளோடு மிகப் பொருத்தமாக இணைத்து ஒரு ரசவாதத்தை சோம. வள்ளியப்பன் இந்நூலில் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். மேலாண்மையும் இலக்கியமும், பழமையும் புதுமையும், இலக்கிய நயமும் நவீன உத்திகளும் இந்நூலில் ஒன்றிணைகின்றன.
தேவகோட்டையைச் சேர்ந்த டாக்டர் சோம வள்ளியப்பன் அள்ள அள்ளப் பணம் (10 பாகங்கள்), இட்லியாக இருங்கள் (5 புத்தகங்கள்), ஆளப்பிறந்தவர் நீங்கள், நாட்டுக்கணக்கு (2) உள்பட தமிழில் 82 புத்தகங்களும், ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்களும் எழுதியிருக்கிறார். You Vs You புத்தகத்துக்காகப் புகழ்பெற்ற ISTD பரிசு பெற்றவர். தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் பரிசு, கவிதை உறவு பரிசு, நெய்வேலி புத்தகக் காட்சி சிறந்த எழுத்தாளர் பரிசு, பாரதி தமிழ் இலக்கிய பேரவை பரிசு, சிறுகதைக்கான இலக்கிய பீடம் பரிசு ஆகியவை இவரது எழுத்துகளுக்கான அங்கீகாரங்களில் சில. எமோஷனல் இன்டெல்ஜென்சில் ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றதுடன், NF NLP, USA யின் 'நியுரோ லிங்விஸ்டிக் புரோகிராம்'-ன் சர்டிஃபைடு மாஸ்டர் பிராக்டிஷனராகவும் இருக்கிறார். மனித வளத்துறையில் BHEL, பெப்சிகோ, வேர்ல்பூல் உள்ளிட்ட நிறுவனங்களில் 25 ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இப்போது பல்வேறு நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
Be the first to rate this book.