முதலாளியம் கண்டுபிடித்த சிறந்த பொருள்களுள் சினிமாவும் ஒன்று. மேற்கு நாடுகளைப்போல சினிமா, கலையாகவோ தொழில்நுட்பமாகவோ கொள்ளப்படாமல் பொழுதுபோக்குச் சாதனமாகவே தொடக்கம் முதல் இன்றுவரை இந்தியாவில் பார்க்கப்படுகிறது. முதலாளிகள் சரக்கு விநியோகம் லாபம் என்று சினிமாவைப் பார்த்தனர். சரக்குத் தடைபடாமல் இருக்கத் தொடர் உற்பத்தி என்ற நிலையில் பிதுக்கித் தள்ளினர். சினிமா பற்றிய தொழில்நுட்பங்களைப் பொதுமக்கள் கற்றுக்கொள்ளாமல் இருக்கும் வகையைச் செய்துவந்தனர். அதனால் நல்ல சினிமா எது ? வியாபார சினிமா எது? என்ற நுட்பத்தை இரகசியமாக வைத்தனர். இதனால்தான் சுதாநாயகன் வழிபாட்டையும் யதார்த்தத்துக்குப் புறம்பான காட்சிகளையும் மக்களை ஏற்கவைத்தனர். அதனால்தான் பெரியாரும் இராஜாஜியும் திரைப்படங்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். மார்க்சியத் தத்துவம் அறிந்த இயக்குநர்கள் வெளிநாடுகளில் வெகுஜன சினிமாவை உருவாக்கினர். இங்கோ முதலாளி உருவாக்கியதால் அதன் வடிவமும் உள்ளடக்கமும் கேள்விக்குரியதாகவே இன்றளவும் இருக்கிறது.
-நிழல் ப.திருநாவுக்கரசு
ஒரு குறிப்பிட்ட காலத்தின் கருத்தியல் பிரதிகளாகத் திகழும் பதிவுகளைப் பின்னால் வரும் பலரும் பதிப்பிக்க முன்வருவர். ஆனால் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தாங்கிய புரட்சிகர இதழ்களின் அப்படியான கருத்தியல் பிரதிகளைப் பதிப்பிப்பது அச்சு சாதனங்கள் எவ்வளவு சனநாயகப்பட்ட பிறகும் அரிதாகவே உள்ளது. அதிலும் திரைப்படம் சார்ந்த விமரிசனக் கட்டுரைகளைப் பதிப்பிப்பதில் பாராமுகமே நிலவுகிறது. இன்றைக்குத் திரைப்படங்கள் சமூகத்தில் முன்வைக்கும் கருத்தமைவுகள், ரசனைகள், விழுமியங்கள் மக்களிடையே பெரும் தாக்கத்தைச் செலுத்தக்கூடியதாக மாறியிருக்கின்றன. இதைப் புரிந்துகொள்ளாத அல்லது அதன் மீது விருப்பமில்லாத அல்லது அதைப் பற்றிய அறிமுகமற்ற அறிவுஜீவிகளே பதிப்புத்துறையிலும் எழுத்தாளர் வட்டத்திலும் பெரும்பான்மையினர் என்று குறிப்பிடலாம். ஆனால் கல்விப் புலத்தில் உள்ள, அதே நேரத்தில் மார்க்சிய லெனினிய பிடிப்பும் ஈடுபாடுமுள்ள ஒருவர் அவற்றின் முக்கியத்துவம் கருதி, அந்தத் தயக்கத்தைப் போக்கி, இந்நூலில் உள்ள கட்டுரைகளைப் பதிப்பித்துள்ளமையே இந்நூல் உங்கள் கைகளில் தவழக் காரணம்.
-பதிப்புரையிலிருந்து
Be the first to rate this book.