மனிதகுல வரலாற்றில் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பாக நெருப்பைச் சொல்லுவர். ஆனால், அதற்கடுத்தநிலையில் எதைச் சொல்வது என்ற கேள்வி எழுப்பினால், கண்டிப்பாக எண்களைத்தான் சொல்லமுடியும். இன்றைய நவீன வாழ்க்கை, எண்ணிமங்களுடனான வாழ்க்கையாக மாறியுள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு முதல் இறப்பதுவரை; ஒரு தனிநபரின் அடையாளச்சான்று முதல் அலைபேசி எண்வரை; பூமியின் நடுப்புள்ளியிருந்து பிரபஞ்சமாகிய பேரண்டம் வரை எல்லாமும் இன்றைக்கு எண்கள்தான். ஆனால், இந்த எண்களின் முக்கியத்துவத்தை மொழி ரீதியாகப் புரிந்துகொண்டுள்ளோமா என்றால் கேள்விக்குறிதான். தமிழில் ஆயிரம், இலட்சம் போன்ற முழுமைபெற்ற எண்களைத் தவிர, மற்றவை பெரும்பாலும் உகரத்தில்தான் முடியும். இப்படியொரு சிறப்பு வேறு எந்தமொழிக்கும் இருக்க வாய்ப்பில்லை. தொண்ணூறு, தொள்ளாயிரம் என்று நூறுக்கும் ஆயிரத்துக்கும் முன்னரே ஏன் இவ்வாறு எண்ணுப்பெயர்கள் அமைகின்றன? பத்து + மூன்று = பதின்மூன்றா? பதிமூன்றா? பதிமூனா? என எந்தத் தெளிவும் இல்லாமலேயே படிக்கின்றனர்; பயன்படுத்துகின்றனர்.
தமிழைச் சிறப்புப் பாடமாகத் தேர்ந்தெடுத்துப் பயிலும் மாணவர்கள், இளங்கலையில் நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம், நம்பியகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை என ஒவ்வொரு படிக்கட்டாக ஏறிதான், முதுகலையில் தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தின் நுழைவாயிலுக்கு வந்தடைவர். ஆனால், இத்தனை இலக்கண நூல்களை ஏன் கற்றோம், முன் கற்றவைக்கும் பின் கற்கப்போவதற்கும் என்ன தொடர்ச்சி என்கிற கேள்வி, இன்றைய முதுகலை மாணவர்களிடம்கூட எழுவது மிக அரிது.
இலக்கணம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது சூத்திரங்கள் எனும் வேப்பங்காய்ச் சுவைதான். அவற்றை ஒழுங்காக மனப்பாடம் செய்தால்தான் தேர்வில் தேர்ச்சியடைய முடியும் என்கிற மதிப்பெண் மனநிலையே இன்றைய மாணவர்களிடையே நிலவிவருகிறது. அதில்கூட, மதிப்பெண் வடிவில் எண்கள்தான் தேர்ச்சியைத் தீர்மானிக்கின்றன என்பதை உணர்ந்துகொள்வாரில்லை. உண்மையில், மொழி இலக்கணத்தைப் பயன்பாட்டு ரீதியில் புரிந்துகொண்டால் வேப்பங்கனியாய் இனிக்கும். அப்படியான இனிய சுவையைத் தரக்கூடியதுதான், உங்கள் கைகளில் தவழும் இந்தச் சிறிய நூல்.
-இரா. வீரமணி
முனைவர் பட்ட ஆய்வாளர்
புதுவைப் பல்கலைக்கழகம்.
Be the first to rate this book.