கால் நூற்றாண்டு கால நாடகத் தேடலில், நாடக ஆசிரியர் ச. முருகபூபதி கண்டடைந்த தொல்தமிழ் நிலப்பரப்பின் செம்மாந்த நாடக மொழியியல் திரட்சியாக இந்த நாடகப் பனுவல்கள் உருவெடுத்துள்ளன. இந்தியப் பெருநிலத்தின் தேசிய, சர்வதேச மேடைகளில் விவாதங்களையும் பாராட்டுகளையும் குவித்த இவருடைய படைப்புகள், இப்போது முழுமையான நிகழ்த்துப் பனுவல்களாக இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
பிளாட்டோவின் அலிகொரி குகை — என்றென்றும் கனவுக்குள் மிதந்துகொண்டிருக்கும் அந்த உருவக வெளி — இந்த நாடகப் பனுவல்களின் அடிநாதமாகச் செயல்படுகிறது. இங்கு உருவகமோ, கலையோ, நேரடிப் பொருளோ நடிகனால் வெளிப்படையாகக் காட்டப்படுவதில்லை. மாறாக, ‘வனத்தாதி’, ‘தேகவயல்’, ‘ரகசிய நிழல்கள்’ முதலிய நாடகங்களில் பொருட்களுக்குள் ஒளிரும் சூட்சுமப் பாத்திரங்களும், அவற்றைச் சூழ்ந்து நடமாடும் நிழல்களுமே நிகழ்த்துக் கணங்களின் சூத்திரங்களாகின்றன.
இந்தப் பனுவல்களில் நடிப்புடலிகள் வாசகனுடன் முரணித்து, அவனைத் துழாவித் தேட அழைக்கின்றன. மெய்யிலி உருக்களாய் அலைகின்ற நிழல்களுக்குள் பொருட்கள் உருமாறுகின்றன. நூலின் பக்கங்களைத் திறக்கும் கணத்திலேயே நாடகம் தொடங்கிவிடுகிறது; ஒளிக்கற்றை பட்டதும் நடிகர்களின் சாயைகள் விந்தையாய் நிறம் மாறுகின்றன.
இருபத்து மூன்று நாடகங்களுக்குள் விரியும் நடிப்புடல், மொழியின் நிறப்பிரிகையும் வாசகனின் அக உணர்வுகளும் இணைந்து நவீன நாடகக்கலைக்கு ஒரு புதிய உரையாடல் வெளியைத் திறந்துவைக்கின்றன. ‘குகைமரவாசிகள்’ — வாசிப்பின் எல்லையைத் தாண்டி, நாடகத்தைச் சிந்தனையாகவும் அனுபவமாகவும் மாற்றும் ஓர் அபூர்வப் பயணம்.
Be the first to rate this book.