மனம் பதறச் செய்யும் உண்மைகளை மிக நெருக்கமாகக் காட்டுகிறவை ஹனகேயின் படங்கள், நம்மால் அவற்றிலிருந்து தப்பியோட முடியாது. முகம் சுழிக்காமல், கண்களைத் தாழ்த்தி ஏறிடாமல், உடல் நெளிந்து அசூயைப் படாமல் அவ்வுண்மைகளை எதிர்கொள்ளவும் முடியாது. எல்லாம் அப்பட்டமானவை, மேற்பூச்சுகள் இல்லாதவை. ஹனகேயின் படங்களில் மருந்துக்குக்கூடப் பார்வையாளருக்கு ஆறுதல் தரும் விஷயங்கள் இல்லை என்பதே இவருக்கும் மற்ற மேதைகளுக்குமான வேறுபாடு, சங்கடமான உண்மைகளைக் காட்டியபின் பார்வையாளரைத் தேற்றுவதில்லை. அரவணைப்பதில்லை. மீளும் வழிகளைச் சொல்வதில்லை. நெருப்பை நோக்கி நம்மைத் தள்ளிவிட்டு விலகி நின்றுகொள்கிறார். அதில் புரண்டு எழுந்து தீப்புண்களுடன் அலறியடித்து ஓடவேண்டியிருக்கிறது. வலியைக் காட்டுவதில் அத்தனை துல்லியம்! சிடுக்கான மனங்களின் வன்முறையைக் காட்டுவதில் அவ்வளவு நேர்த்தி! இவற்றோடு புதிர்களாக மட்டுமே எஞ்சப்போகும் கூர்மையான கேள்விகளையும் கேட்டுக்கொள்கிறார்.
Be the first to rate this book.