இராயபுரத்தில் குத்துச்சண்டை அறிமுகமாகிப் புகழ் பெற்றதற்குக் காரணம் வெள்ளையரும், ஆங்கிலோ-இந்தியரும் ஆவர். சென்னையில் அவர்கள் முதன்முதலில் திரளாகக் குடியேறிய இடம் இராயபுரம்தான், பின்னர் அவர்கள் பெரியமேடு, பெரம்பூர் ஆகிய பகுதிகளிலும் குடியேறினர். அவ்வூர்ப் பகுதியிலும் சிறந்த வீரர் பவர் உருவாகினர். டைகர் டி. நாட்டெரியும், வாலி மேத்யூசும் பெரியமேடு பகுதியில் வாழ்ந்தவர்கள், இராயபுரத்தில் சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் ஆங்கிலோ-இந்தியர் அடிக்கடி குத்துச்சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததால், அதனைக் கண்ட அப்பகுதி மக்களும் அதில் ஆர்வம் கொண்டு ஈடுபடலாயினர். அப்படி ஈடுபட்டுப் புகழ் பெற்றவர்தான் கித்தேரிமுத்து, அவரைக் கண்டு பற்பல வீரர்கள் அங்கு உருவாயினர். இராயபுரம் குத்துச்சண்டையில் பரவலாகப் புகழ் பெறுவதற்குக் காரணம் அதுவேயாகும்.
சிறுவயது முதல் எனக்குக் குத்துச்சண்டையில் ஆர்வம் இருந்ததாலும், புகழ் பெற்ற வீரர்கள் என் தந்தையார்க்கு நண்பர்களாக இருந்ததாலும், அவர்கள் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து சென்றதாலும், அவர்களைப் பற்றி உள்ளும் புறமும் நான் நிறைய தெரிந்திருந்தேன், பிற்காலத்தில், பற்பல போட்டிகளைத் தொடர்ந்து பார்த்ததாலும், துரைராஜ் போன்றவர்கள் எனக்கு நண்பர்களாக இருந்ததாலும், ஆறுமுகம் போன்ற வீரர்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்ததாலும் மிகுந்த அனுபவம் எனக்குண்டு.
இக்கட்டுரைகளில் வீரர்களைப் பற்றி நானறிந்தவரை எழுதியுள்ளேன். அவற்றில் அவர்களின் திறமைகளைக் குறிப்பிட்டிருப்பதுடன், சிலரின் பழக்கவழக்கங்களையும் எழுதியுள்ளேன், வீரர்களின் மறுபுறத்தையும் நாம் அறிய வேண்டும். அப்போதுதான் அவர்களின் உண்மை நிலையை உணரமுடியும். அதுதான் சரியான வரலாறு. அதனை நான் ஓரளவு வெளிப்படுத்தி உள்ளேன்.
முன்னுரையில்...
Be the first to rate this book.