'கினு கோயலார் கலி', பெயரில் ரவீந்திர நாதம் ஒலிக்கிறது. அந்தச் சந்தில் வீட்டுச் சுவர்கள் காரை பெயர்ந்து பரிதாபமாய்க் காட்சியளித்தன. நகரச் சௌகரியங்கள் எதுவும் இங்கே கிடையா. வெளிச்சமும் காற்றும் புகா, வண்டிகளும் கார்களும் இத்தெருவுக்குள் வரா, கடைகள் கூட இல்லை. ஆனால், மழை வெள்ளப்பெருக்கு வஞ்சமில்லாமல் அழுக்கையும் சாணியையும் சேர்த்துக் கொண்டு இத்தெருவுக்குள் பாய்ந்து சேரும். இந்தப் பரிதாப நிலையிலும் அந்தச் சந்தில் வாழ்க்கை நடந்துகொண்டு தான் இருந்தது. சௌரங்கியின் டம்பமும் பளபளப்பும் இங்குக் காணமுடியாது. புலி, கரடியைப் போன்ற அச்சுறுத்தும் பயங்கர ஜீவனும் கிடையாது. மயிலைப்போல் ஆடும் கவர்ச்சியில்லை. மானைப்போல் மயக்கும் மருள் இல்லை. ஆனால், கட்டாயம் உயிர் இருக்கிறது. தன் நெஞ்சின் மேலேயே ஊர்ந்து செல்லும் நத்தையைப்போல் இங்கும் வாழ்வு தன்னையே வருத்திக் கொண்டு இழைந்து கொண்டிருந்தது.
இந்தச் சந்தில் வாழ்பவர்களின் நிலையும் அதுவே. பகட்டில்லாத, கவர்ச்சியில்லாத நிலை மத்தியதரக் குடும்பத்தினரின் நிலை. இருண்ட, வறண்ட வாழ்வு. படிப்பற்ற, ருசியற்ற சூழ்நிலை. இங்கு வசிக்க வந்தார் சிவவிரத பாபு. பாப்புலர் பார்க்கிலிருந்து பவானிபுருக்கும். அங்கிருந்து பௌபஜாருக்கும், கடைசியாய்க் கினு கோயலார் கலியில் ஓர் இருண்ட வீட்டுக்கும் படிப்படியாய் இறங்கி வந்தனர் நீலாவின் குடும்பத்தினர். ஒரு மத்தியதரக் குடும்பத்துக்கு ஏற்படும் இன்னல்களும் இடர்களும் கவலைகளும் தெளிவாய் வரையப்பட்டிருக்கின்றன. இந்த வர்ணனை நமக்கு ஒருவித மூச்சடைப்பைத் தருகிறது. இந்தக் குறுகிய சூழ்நிலையிலிருந்து வெளியேறவே முடியாதா? தப்பித்துப் போகவே முடியாதா? ஆசிரியர் நம்மை உடனேயே வீட்டின் திறந்த மேல் தளத்துக்கு அழைத்துப் போகிறார். சுத்தமான காற்றில் மூச்சுவிட்டுப் பிழைத்துக்கொள்ளலாம்.
Be the first to rate this book.