காலம், எத்தனை உணர்ச்சிகளைஅழித்துவிட்டது. அளவற்ற தனிமையில் அம்மா, பெரியப்பா, உழல்கிறார்கள்.புஞ்சை நிலத்தில் எம்மூதாதைகள் ஒட்டிய கலப்பைகளை, நெல் அவித்துக் கொட்டிய கொப்பறைகளை, கால்நடைகள் நிரம்பியிருந்த கட்டுத்தறிகளை, வைக்கோல் நிரப்பிய கவணைகளை, காலம் திருடிக்கொண்டுவிட்டது.
போகட்டும். இப்படி நாங்கள் வாழ்ந்த பழைய வீட்டை, அதில் இழந்த உறவுகளை, என்றோ அவர்கள் இதழ்களிலிருந்து நழுவி விழுந்த சிரிப்பொலிகளை, அந்தி சாயும்போது சிறிய மாடங்களில் நல்ல விளக்கை ஏற்றிவைத்து, 'அப்பனே, முருகா! எங்கள் குடும்பத்தை நல்லா வைப்பா!' என்கிற எளிய பிரார்த்தனையை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம், விழிமடை திறந்து மளுக்கென்று கண்ணீர் வருகிறதே.. காலமே, இந்த ஒரு புராதான உணர்ச்சியையாவது அழிக்காமல் விட்டு வைக்கிறாயா?
இது கரிகாலனின் bio note மட்டும் இல்லை. நிலவுடமைச் சமூகம் படிப்படியாக விழத் தொடங்கிய 70, 80 கால இளம்பருவத்தைக் கொண்ட தமிழ்ப் பிள்ளைகளின் ஞாபகங்களும் இப்படிதான் இருந்திருக்கக் கூடும். இந்நூல் வாழ்வின் நிமித்தம் நீங்கள் விட்டுவந்த உங்கள் உறவுகளை, ஊரை, அவ்வூர் காத்த சிறுதெய்வங்களை, நதிகளை, குளங்களை, நிலங்களை, கால்நடைகளை உங்களுக்கு நினைவு படுத்தும். ஒரு நாள் ஊருக்கு போய் வருவோமா? என நினைக்கத் தூண்டும்.
சாதியும் பிற்போக்குத்தனமும் விடுத்த சிறுநில வாழ்வு, இன்னும்கூட நமக்குத் தேவைப்படுகிறது. நமது விளைநிலங்களை பறிகொடுக்காமல், நமது அடையாளங்களை இழந்துவிடாமல், ஏகாதிபத்தியம், பெருந்தேசியம், கார்ப்ரேட்மயம் இவற்றோடு மல்லுக்கட்ட, சிறிய அளவிலாவது இந்நூல் உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கக்கூடும்.
Be the first to rate this book.