தாமிரபரணி என்கிற பெயரில் தெற்கே ஓடிக்கொண்டிருப்பது ஒரு நதி அல்ல. நீண்ட கதை. அதில் நீந்திப் பிழைத்து எழுந்தவர்கள், கதைசொல்லிகள் ஆவது தவிர்க்க இயலாதது. கார்த்திக் புகழேந்தி என்றதும், தமிழ்ப் பண்பாட்டு நினைவிருளுக்குள், மொழிப்பந்தம் ஏந்தி ஆங்காரமாய்த் துள்ளியோடும் ஒரு முரட்டு நிழல்தான் எப்போதும் என் நினைவுக்கு வருகிறது.
இவர் தன் கதைகளை, துடியான ஒரு நாட்டார் சடங்கு போலவும், மிக நிதானமான மன அகழாராய்ச்சி போலவும், நிகழ்காலம் உருவாக்கும் பன்முனை அதிகார அழுத்தத்திற்கு எதிரான எளிமையின் சீற்றமாகவும், பேரியற்கையின் முன் சிறு கீழாநெல்லிச் செடியாகத் தலையாட்டி வாழ்தலின் ஒரு பகுதியாகவும் நிகழ்த்துகிறார்.
ஒரு பொருண்மை குறித்து ஆய்வுசெய்யப் புறப்பட்டு, கதையோடு திரும்பி வருவதும், ஒரு கதையை எழுதப்போய் அதன் பாதைகளைக் கிளறி ஆய்ந்து, புது உண்மைகளோடு திரும்பிவருவதும், இவர் பயணத்தில் மாறி மாறி நிகழும் சுவாரஸ்யம். நானதை அருகிருந்து பார்த்திருக்கிறேன். அந்தப் புனைவற்புதத்தின் சுவடுகளை இத்தொகுப்பின் சில கதைகளில் நீங்கள் காணலாம். நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட வரலாற்றை, வெற்றிலை வாடைமிக்க சொலவடைகளால் சீண்டிப் பார்க்கும், கலைஞனுக்கே உரிய விளையாட்டுக் குணம் கார்த்தியிடம் எனக்கு மிகப் பிடித்த ஒன்று. இந்த உலகின் சுழல் அச்சு முறிந்துவிடாமல் தாங்கிக் காத்திருக்கும், மானுட அறமெனும் சுடுமட்சிலைக்கு, தன் கதையிழைகளால் ஒரு சேலை நெய்துகொண்டிருக்கிறார் கார்த்திக். இத்தொகுப்பு, அப்பெருஞ்சீலையின் அழகான சிறு முந்தானை!
- கவிஞர் வெய்யில்
Be the first to rate this book.