1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம். அந்நாட்களில் நான் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரையிலுமாக நீண்டிருக்கும் கடற்கரை ஊர்களில் வாழும் மீனவர் வாழ்க்கையை ஆராய்ந்து, ஓர் புதினம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது இலக்கியக் கூட்டமொன்றில் சிறந்த எழுத்தாளரும், திறனாய்வாளருமாகிய மதிப்புக்குரிய நண்பர் திரு.சிட்டி (சுந்தரராஜன்) அவர்களைச் சந்தித்தேன். அவர் நான் தூத்துக்குடியில் தங்கியிருந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டு அன்புடன் விசாரித்தார். அத்துடன், "நீங்கள் தூத்துக்குடிப் பகுதியில் இன்னும் ஓர் களத்தை ஆராய்ந்து நாவல் எழுத வேண்டும். மனித வாழ்வுக்கு மட்டுமல்ல, விலங்கினங்களுக்கும் கூட உயிர்வாழ இன்றியமையாத ஓர் பொருள் உப்பு. நீர், காற்று, வெளிச்சம் போன்று இது இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கும் விலையின்றிக் கிடைக்க வேண்டும் என்று காந்தியடிகள் உப்பை முன்னிட்டு நாட்டு விடுதலைக்கான அறப்போரைத் துவக்கினார். நீங்கள் உப்பளங்களைச் சென்று பார்த்தும் ஓர் நாவல் புனைய வேண்டும்" என்று கூறினார். நான் ஒரு நாவலை எழுதி முடிக்கும் முன் அநேகமாக இவ்விதமான தூண்டல்களுக்கான வாக்குகள் அடுத்த முயற்சியைத் துவக்க என் செவிகளில் விழுந்துவிடும். இம்முறை இது வெறும் வாக்கு என்று கூடச் சொல்ல மாட்டேன். மிகவும் அழுத்தமாகவே பதிந்து விட்டது. எனவே, 'அலைவாய்க் கரையில்' என்ற நாவலை முடித்த கையுடன் நான் தூத்துக்குடிக்குப் பயணமானேன்.
தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன். இதற்கு முன் நான் உப்பளங்களைக் கண்டிருந்திருக்கிறேன். வறட்சியான காற்றும் சூரியனின் வெம்மையும் இசைந்தே உப்புத் தொழிலை வளமாக்குகிறதென்ற உண்மையை உப்புப் பாத்திகளில், ’கரிப்பு மணிகள்’ கலகலக்கும் விந்தையில் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் இந்த வியப்புக்கப்பால் உப்புப் பாத்திகளில் உழைக்கும் தொழிலாளரைப் பற்றி எண்ணும் கருத்து அப்போது எனக்கு இருந்ததில்லை. இப்போது நான் அந்த மனிதர்களைத் தேடிக்கொண்டு உப்பளங்களுக்குச் சென்றேன்.
* ராஜம் கிருஷ்ணன்
சாகித்ய அகாடமி விருது வென்ற முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர்... களப்பணி மூலம் புனைவுக் கதைகள் எழுதிய முன்னோடி!எங்கோ நான்கு சுவர்களுக்குள் நாற்காலியில் அமர்ந்து எழுதுவது மட்டுமே இலக்கியமல்ல என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். 1925-ம் ஆண்டு முசிறியில் பிறந்தார் ராஜம். பள்ளிக் கல்வியை முடிக்கும் முன்பே 15 வயதில் ராஜத்துக்கு, அந்தக் கால வழக்கப்படி திருமணம். கணவர் முத்துகிருஷ்ணன் மின்துறைப் பொறியாளர் என்பதால் தொடர்ச்சியாக தமிழ் நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க, மனைவி ராஜமும் மகிழ்வுடன் பயணமானார். புதிய ஊர்களில் தனிமையை விரட்ட மனைவியை எழுத ஊக்குவித்தார் முத்துகிருஷ்ணன். திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கழித்து 1944-ம் ஆண்டு ராஜம் கிருஷ்ணனின் முதல் ஆங்கிலச் சிறுகதை 'இந்திய சிவிக் கார்ப்ஸ்' புத்தகத்தில் பதிப்பிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 20!
முறையான பள்ளிக்கல்வியற்ற, கல்லூரியில் காலடித்தடம்கூடப் பதிக்காத ராஜம் கிருஷ்ணன் உலகம் போற்றும் எழுத்தாளராக வளர அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும்தான் காரணம். 200 சிறுகதைகள், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள், 20 வானொலி நாடகங்கள், 20க்கும் மேற்பட்ட புதினங்கள் எழுதி தமிழ் மொழியின் போற்றத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் ராஜம்.
அவரது கதைமாந்தர்கள் அன்றாடம் நாம் காண்பவர்களாக, கடந்து செல்பவர்களாகவே இருந்தார்கள். பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி, அவர்களது போராட்டங்களைச் சொல்பவையாக இருப்பவை ராஜத்தின் படைப்புகள்!
Be the first to rate this book.