கடந்த முப்பது ஆண்டுகளாகக் கவிதைத் துறையில் தொடர்ச்சியாக, தீவிரமாக இயங்கி வருபவர் கவிஞர் கரிகாலன். உலகமயமாக்கல், திறந்த சந்தை, வேளாண் அழிவு, சுற்றுச் சூழல் மாசு, இயற்கை வளச் சுரண்டல், பூர்வகுடிகளை அவரது நிலங்களிலிருந்து வெளியேற்றல், கல்வி தனியார்மயமாதல், காதல், சிற்றூர் பண்பாடு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெருந்தேசிய எதிர்ப்பு என விரிவான உள்ளடக்கம் உடையவை அவரது கவிதைகள். இத்தகு பரிமாணங்களைக் கொண்ட, அவரது முழுமையான தொகை நூல் 'நாஸ்தென்கா வாழ்ந்த ஊர்'.
கவிஞரின் இத்தொகுப்பை முன் வைத்து, விரிவான விவாதத்தை இந்நூல் வாயிலாக நிகழ்த்துகிறார் கவிஞர் றியாஸ் குரானா. உலக அளவில் இப்படி பல கவிஞர்கள், விமர்சகர்கள், தம் சமகாலப் படைப்பாளிகளைக் கொண்டாடி வந்திருக்கின்றனர். டி. எஸ். எலியட்டின் சமகாலத்தவரான எஸ்ரா பவுண்ட், அவரது படைப்புகளை ஊக்குவிப்பதிலும் திருத்துவதிலும் முக்கிய நபராக இருந்தார். போலவே, மிஏ ஆடன் தன் சமகாலத்தவரான ராபர்ட் ஃப்ரோஸ்ட் கவிதைகள் பற்றி விரிவாக எழுதிப் பாராட்டினார். இலக்கிய வரலாற்றில் இவ்வளமான பண்பாடு மீண்டும் திரும்புகிறது. இதுவரை வாசித்த கண்ணோட்டத்திலிருந்து விலகி, சுவிஞரின் கவிதைகளுக்கு விரிவான அர்த்தங்களை வழங்குவதாக இருக்கிறது, றியாஸ் குரானா நிகழ்த்தும் இந்நவீன உரையாடல்.
- அம்பிகா குமரன்
Be the first to rate this book.