ஈழத்து நவீன கவிதையின் பாரம்பரிய குணமாகக் கருதப்பட்டு, தமிழின் விரிந்த பரப்பிற்குள் நிலைபெற்ற இனமுரண்பாட்டின் எதிர்க் குரல்களும், சமூகப் பொறுப்புணர்வு என்ற பிடிவாதங்களினடியாக வலியுறுத்தப்பட்ட ஏதோவொரு பக்க அரசியல் இலட்சியச் சாய்வு கொண்ட பிரச்சாரங்களும் பல்லிளித்துக்கொண்டு திமிறியபடி மூர்க்கமாக கூக்குரலிட்ட கவிதைகளிலிருந்து விலகி. தனிமனிதர்களும் சமூகத்தின் ஒரு அங்கம்தான். மாறாக தமிழ் பேசும் மக்களின் பொதுவான பிரச்சினை என ஒன்றை முதன்மைப்படுத்துவது அவசியமில்லை என்று நம்மை உணர்ச் செய்யும் கவிதைச் செயலை முன்னெடுக்கும் சிலரில் அகமது ஃபைசலும் ஒருவர். ஆயினும், அவர்களில் இருந்து தனித்துத் தெரியும் ஒரு கவிதை சொல்லியாக வளர்ந்து நிற்பவர்.
அந்தக் கவிதையை நவீன கவிதையின் பொதுப் பண்புகளில் இருந்து விலக்கி, கவன ஈர்ப்புச் செய்யும் எடுத்துரைப்பு முறைகளையும், கவிதைக் கற்பனைகளையும் அதிகம் வேறுபட்ட தன்மையில் நிகழ்த்த முற்படுபவர். மனதின் விசித்திரங்களையும், சூழலின் பன்மையான நிலவரங்களை உள்ளெடுத்துக்கொண்டு தனது கவிதை உலகை உருவாக்குபவர். அந்த உலகிலேயே சஞ்சரிக்கும்போது. கற்பனையின் அசாத்தியங்களை உணரும்படி நம்மைத் தூண்டி க்கொண்டிருக்கும் கவிதைகளின் சொந்தக்காரர் அகமது ஃபைசல். ஈழத்தின்; ஏன் தமிழின் விரிந்த பரப்பிற்குள் தனது கவிதைகளின் வழியாக தனித்த இழைகளால் பின்னிய பாதை வழியே பயணிப்பவர். அவருக்கு ஒரு சக பயணியாக எனது மனம் நிறைந்த அன்பும் வாழ்த்துகளும்.
-றியாஸ் குரானா
Be the first to rate this book.