புதர்களை நீரூற்றி, உரமிட்டு, காந்து, வளர்க்கும் அதிகார நிறுவனங்கள் அற்புதமான தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நூல்களைப் பதிப்பிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. என்னால் ஒரு பட்டியலே தர இயலும், பகை அஞ்சித் தவிர்க்கிறேன்.
இந்தர் குழலில் பரிசல் புத்தக நிலையம் வெளியிடும் வையாபுரிப் பிள்ளையின் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் 'கம்பன் காவியம்', கொள்வாரில்லை என்பதற்காகக் கடை விரிக்காமலும் இருக்க இயலாது. தமிழிலும் கம்பனிலும் ஆர்வம் உடையவர்கள் வாங்கி ஆதரிக்க வேண்டும்.
'கம்பன் ஆராய்ச்சிப் பதிப்பு - முன்னுரை' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றுண்டு நூலில், ஆராய்ச்சி மாணவரும் வழி நடத்தும் பேராசிரியரும் ஆழ்ந்து கற்கும் தரத்தில் இருப்பது. அதுபோலவே இராம காதை பாலகாண்டம் பதிப்பு விழா தலைமை உரை எனும் கட்டுரையும், 'கம்பனும் தமிழும்' என்ற கட்டுரை தமிழனாக எவரையும் பெருமிதம் கொள்ளச் செய்யும். கொற்கை நன் முத்துக்கும் நாவற்பழக் கொட்டைக்கும் வேறுபாடு அறியாரை என் செய?
கம்பன் பாயிரத்தில் பாடியதைப் போல
'ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை, முற்றவும் நக்குபு க்கென ஆசை பற்றி அறையலுற்றேன்'
நானும் இந்நூலின் சிறப்புக்களை!
அன்புடன்
-நாஞ்சில் நாடன்
Be the first to rate this book.