கல்லிலே கலை வண்ணம் கண்டவர்கள் நம் தமிழர்கள். எண்ணற்ற சிற்பங்கள், எல்லையற்ற கற்பனைகள், அத்தனையும் கல்லுக்குள்ளே ஆயிரம் ஆயிரம் கதை பேசிடும். அவைகளிடம் நின்று காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே அவை பேசுவது கேட்கும். வரலாறு சொல்லும் சிற்பங்கள்; புராணத்தைச் சொல்லும் சிற்பங்கள்; கதைகளைப் பேசும் சிற்பங்கள் ஏன் இசை பாடும் சிற்பங்கள் என எத்தனையோ சிற்பங்களைப் பற்றிய சுவையான செய்திகளின் தொகுப்பே இந்நூல்.
தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தாராசுரம் முதலான பல இடங்களுக்குக் கூட்டிச் சென்று, அங்குள்ள சிற்பங்கள் பேசும் கதைகளையும், வரலாறுகளையும், புராணங்களையும் சுவைபடச் சொல்லிச் செல்கிறது இந்நூல். கங்கைகொண்ட ராஜேந்திரன் மகனான விஜய ராஜேந்திர சோழன் மேலைச் சாளுக்கியரது கல்யாணபுரத்தை வென்று அங்கிருந்து கொண்டுவந்த துவாரபாலகர் சிலையின் அழகையும் வரலாற்றையும், பிச்சாடணராக வரும் சிவபெருமானின் அழகிய திருக்கோலத்தின் வரலாற்றையும், கல்யானை கரும்பைத் தின்ற திருவிளையாடற் புராணச் செய்தியையும் என எத்தனையோ செய்திகள் கல்லுக்குள் பொதிந்து இருப்பதைக் கவினுற வடித்து இந்நூலில் அளித்துள்ளார் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள். கற்கள் பேசும் என்பதற்கு ஒரு கதை. கற்கள் வரலாறு சொல்லும் என்பதற்கு ஒரு கதை. கற்கள் இசை பாடும் என்பதற்கு ஒரு கதை. இப்படிப் பல்வேறு கதைகளைக் கூறி, அவற்றுக்கான சிற்பங்கள் எங்கு அமைந்துள்ளன என்ற தெளிவான குறிப்பையும் தந்து, அங்குச் சென்று காண இயலாதவர்களுக்குச் புகைப்படமாக அந்தச் சிற்பத்தையும் அளித்து இந்நூலைக் கவினுற அமைத்துள்ளார் ஆசிரியர். இவர் கதை சொல்லும் போக்கும், சிற்பத்தின் அழகை வர்ணிக்கும் நிலையும் நம்மை உடனே அங்குச் சென்று காண வைக்கும் ஆவலைத் தூண்டுவதாக அமைகின்றது. இத்தகு அரிய நூல் அனைவருக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் எமது பதிப்பகம் வழி மீண்டும் வெளியிடப் பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
Be the first to rate this book.