நீண்டகால குடும்ப அமைப்பின் வரலாற்று தொடர்ச்சியில் அமுதா ஆர்த்தியின் இக்கவிதைகளும் நவீனத்துவத்தின் போதாமையை அரசியலாய் அங்கலாய்ப்பாய் முணுமுணுக்கின்றன. தன் வாழ் இடத்தில் தன்மானமிக்க மனிதர்களையும் மனுஷிகளையும் கூட இவர் கவிதையாக்கி இருக்கிறார். குடும்பத்திற்கு வெளியே பிறரை நேசிக்க முடியாத எல்லைகள் குறுக்கப்பட்ட இடத்தின் துக்கமும் இளமையான அல்லது இளமைக்கான மறுபரிசீலனையும் இவரது கவிதைகளின் சிறப்பு என்று சொல்லலாம்.
அமைப்புகளின் வேரோடிப் போன வரைவெல்லைகளை மீறி தற்சார்பான சுயமரியாதைக்கு தன்கவிதைகளைப் பழக்கிக் கொண்டுள்ளன இக்கவிதைகள் என்றாலும் மிகையாகாது. உணர்வுகளின் எழுச்சிகளில் அல்லது மற்றவரோடு கொள்ளும் உறவில் எளிமையும் இயற்கையும் கலந்த அற்புதமன ஒரு பெண் வடினம் அமுதா ஆர்த்தி. ஆண் பெண் உறவுகள் காதல் காமம் போன்ற விவகாரங்களில் இன்றைய தீவிரவாததன்மை அல்லது அதன் சாயல் இவர் மீது படியவில்லை என்றாலும் உள் நடுங்கும் வீரியம் கொண்டவர் மற்றும் எதிர்மறைகளில் கேள்விகளை வைப்பவர் என்கிற வகையில் நமது வாசிப்பிற்கு தோதாகிறார்.
இயற்கையின் புதிர்களில் இருந்து அனைத்திற்கும் மறைமனம் கொடுக்கும் கவிஞர் இத்தகைய தன்னுணர்ச்சி பாடல்களில் முறையாகவும் ஆழ்ந்த நுட்பத்துடனும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். இயற்கையும் பெண் மனமும் கலந்து உறவாடி இன்பம் கண்ட இக்கவிதைகள் நமக்கும் ஒரு நல்லறத்தை போதிக்கின்றன அல்லது நட்பை பெருக்குகின்றன.
-யவனிகா ஸ்ரீ ராம்
Be the first to rate this book.