லார்க் பாஸ்கரன் கவிதைகளைப் படிக்காமல் இருந்திருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்போமோ? எனத் தோன்றுவதுண்டு. நாம் நேசிக்கிற மனிதர் ஒருவரின் மரணம் ஏற்படுத்துகிற துயரை உருவாக்குபவை இவருடைய கவிதைகள். ஒரு கவிதை நம்மை நிலைகுலைய வைக்கவில்லை என்றால், அது என்னதான் கவிதை? மனிதன் வெறும் கடவுளின் தவறா? அல்லது கடவுள் மனிதனின் தவறா? என நீட்ஷேவுக்கு இருந்தது போன்ற இருத்தலியல் குழப்பத்தை உருவாக்குபவை இவரது கவிதைகள், ழீன் பால் சார்த்தர் கூறுவதுபோல், எப்படி வாழ்வது? என்பதைத் தவிர இங்கு அனைத்தும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. வாழ்வெனும் பெரு நதியைக் கடக்க, ஒரு பாலத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியை தன் கவிதைகளின் ஊடாகச் செய்கிறார் பாஸ்கரன். காஃப்கா தன் காதலிக்கு எழுதிய சுடிதத்தில் கூறுவதைப்போல் இக்கவிதைகள் நமக்குள் உறைந்திருக்கும் கடலைப் பிளக்கும் கோடரியாக இருக்கிறது.
சமூகத்தின் பாரம்பரிய மதிப்பீடுகள், அவற்றுக்கு அடித்தளமாகத் திகழ்கிற நீண்டகால கண்ணோட்டங்கள், இவற்றின் செல்வாக்கைக் குலைப்பவையாக, கடல் தன் மீனைச் சமைப்பதில்லை தொகுப்பின் கவிதைகள் திகழ்கின்றன. துன்பம் என்பதுதான் மனித இருப்பின் சாராம்சம். இதைத் தவிர்க்க முடியாது. துன்பத்திலிருந்து தப்பிக்க விரும்புவதைவிட அதை எதிர்கொள்ள இக்கவிதைகள் நம்மை ஆயத்தப்படுத்துகின்றன. வேறு சொற்களில் கூறுவதானால் துன்பத்தைத் தாங்கும் திறனை இக்கவிதைகள் நமக்கு வழங்குகின்றன. உலகத்தைப் புரிந்து கொள்வதற்கு, ஒருவர் அவ்வப்போது அதிலிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்கிறார் காம்யூ. இத்தொகுப்பு அந்த வாய்ப்பை தன் வாசகர்களுக்கு வழங்குகிறது.
-கரிகாலன்
Be the first to rate this book.