"என் கதைகளின் தராதரத்தைப் பற்றி எரிந்த கட்சி, எரியாத கட்சி ஆடுகிறார்கள். அதற்குக் காரணம் பலர் இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும். இன்னது சொல்லக் கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல. சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு குடத்தி விட்டோம். சில விஷயங்களை நேர்நோக்கிப் பார்க்கவும் கூசுகிறோம். அதனால்தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக் கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக் களரியையும், மனக் குரூரங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடமிருக்குமேயானால் ஏழை விபச்சாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போகப் போகிறது? இற்றுப் போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா? மேலும், இலக்கியமென்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், சினிமா நடிகை சீதம்மாள், பேரம் பேசும் பிரம்மநாயகம், இத்தியாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு இவர்களது வாழ்வுக்கு இடம் அளிக்காமல் காதல், கத்திரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற, அனுபத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. குடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை.
-புதுமைப்பித்தன்
Be the first to rate this book.