ஜவ்வாது மலையில் காணப்பெறுகின்ற தொல்லியல் தடயங்களைத் தெளிவுபடுத்தும் இச்சிறுநூல் மனிதகுல நாகரிகம் குறிஞ்சி நிலமான மலைப்பகுதியிலிருந்தே தோன்றியுள்ளது என்பதைத் தெளிவாக்குகிறது. நெடுங்கல், நடுகல், பதுக்கை, தாழி எனப் பெருங்கற்காலத் தடயங்கள் அனைத்தும் ஜவ்வாது மலைப் பகுதியில் காணப்பெறுகின்றன. இத்தடயங்கள் அனைத்தும் பெருங்கற்கால நாகரிகம் தொடங்கி அம்மலை மக்களின் வாழ்வியல் நிலைபெற்றிருக்கும் தன்மையினைப் புலப்படுத்தும் புறச்சான்றுகளாக அமைகின்றன. அதேவேளை, பெருங்கற்காலத்தின் தொடக்கப் பகுதியான வேட்டைச் சமூகம் தொடங்கி அம்மலை மக்களின் வாழ்வியல் நிலைபெற்றிருப்பதை நூலாசிரியர்தம் நேர்காணல் அகச்சான்றாக இருந்து புலப்படுத்துகிறது.
இந்நூலாசிரியர் முனைவர் ரே. கோவிந்தராஜ் ஓர் அகத்தாராக இருந்து ஜவ்வாது மலைமக்களின் பண்பாட்டு வளர்ச்சியையும் வரலாற்றையும் பதிவு செய்கிறார். சங்ககாலக் குறுநில மன்னனான நன்னன்சேய் நன்னனை வேடியப்பன் எனும் பெயரில் குலதெய்வமாக வழிபடும் இம்மலை மக்களின் வாழ்வியல் பல்வேறுகட்ட மனிதகுல வளர்ச்சியைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைகிறது. இச்சிறுநூல் ஒரு முதன்மை நூல். இனி உருவாக இருக்கின்ற பழங்குடியியல், தொல்லியல், பழங்குடிப் பண்பாட்டியல், இனவரைவியல், பழங்குடி வாழ்வியலின் ஊடான தத்துவவியல் நூல்களுக்கான முன்னோடி நூலாகத் திகழும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்காது. இந்நூலாசிரியர், இதுபோன்ற இன்னும் பல நூல்களை எழுதுவார் என நம்புகிறேன்.
- முனைவர் மா. பரமசிவன்
Be the first to rate this book.