ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த பல துறைகளிலும் புகுந்து, வெற்றிக் கொடி நாட்டிச் சாதனை மகுடங்களைச் சூட்டிக் கொண்டிருக்கும் இந்தியப் பெண்கள் சிலரின் உண்மைக் கதைகளைப் பேசுகிறது இந்த நூல். பாலினப் பாகுபாடு, கண்மூடித்தனமான சமுதாயக் கட்டுப்பாடுகள். உடற் குறைபாடுகள், உயரக் குறைபாடு, முதுமை, நோய், விபத்து, விளிம்பு நிலை என்று பல காரணிகள் பின்னோக்கி இழுத்தாலும், அவற்றைத் தகர்த்தெறிந்துவிட்டுத் தகத்தகாயமாக ஜொலித்த மங்கையர்களின் வரலாறுகள், இந்த நூலைப் படிக்கும் பல பெண்களுக்கும் உத்வேகத்தை அளிக்கும்.
உலகளாவிய நிலையில் பல பெண் சாதனையாளர்கள் இருந்தாலும், இந்தியத திருநாட்டின் சாதனை புரிந்த மங்கையர் சிலரின் வெற்றிகளை இந்த நூல் சொல்லிச் செல்கிறது.
நிலம்,நீர்,வானம் என்றஅனைத்து வெளிகளிலும் இந்தநூலில் சொல்லப்பட்டிருக்கும் பெண்களின் சாகசக் கதைகள் விரிந்து பரந்திருக்கின்றன. வனம், வனவிலங்கு மீட்பு. தீயணைப்பு, விளையாட்டு, சுதந்திர வேள்வி, இசை, திரைத் துறை, இயற்கையைப் பேணுதல், வர்த்தகம் பொது நிர்வாகம், நீதி பரிபாலனம், போன்ற பல துறைகளிலும் பெண்கள் புரிந்த சாதனைகள் பலவும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் பல துறைகளிலும் முன்னோடிகளாகவும் இருந்திருக்கின்றனர்; விருதுகளையும் பரிசுகளையும் பட்டங்களையும் குவித்திருக்கின்றனர்.
மூன்றாம் பாலினத்தவர்கள் முன்னேற்றம் அடைந்த சம்பவங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு பெண்ணின் சாதனைக்குப் பிறகும் அவர்கள் மேற்கொண்ட முயற்சியும் பயிற்சியும் தெளிவாக உள்ளதை இந்த நூல் விவரிக்கிறது.
'நம்மாலும் சாதிக்க முடியுமா?" என எண்ணும் பெண்கள் அவசியம் படிக்கவேண்டிய
நூல் இது.
பெண்கள் மட்டுமல்ல... ஆண்களும் படித்துத் தமது குடும்பத்துப் பெண்களுக்கு நல்லதோர் ஊக்கத்தை வழங்க இந்த நூல் காரணமாக அமையும்.
படித்துப் பாகுங்கள்: பயன் பெறுங்கள்!.
Be the first to rate this book.