இமயமலை : ஒரு பண்பாட்டுப் பயணம் குஜராத்தி இலக்கிய உலகில் ஒரு செவ்வியல் படைப்பாகக் கருதப்படுகிறது. பயணம் செய்வதில் மிகுந்த விருப்பமுடைய காலேல்கர் தன் நண்பர்களுடன் 1912இல் இமயமலைக்கு நடந்தே பயணம் செய்தார். ஏறத்தாழ இரண்டு மாத காலம் பனியிலும் குளிரிலுமாக அந்த மலையில் அலைந்து பல இடங்களைப் பார்த்தார். பல மனிதர்களைச் சந்தித்தார். அவை பயண அனுபவங்களாக மட்டுமன்றி, மானுட வாழ்வை இன்னும் விரிவான கோணத்தில் அணுகிப் புரிந்துகொள்வதற்கான ஒரு பார்வையையும் அவருக்கு அளித்தது. அவர் ஒவ்வொரு கட்டுரையிலும் பதிவு செய்திருக்கும் ஒவ்வோர் அனுபவச்சித்தரிப்பும் இமயமலையை நம் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்துவதோடு நம் நாட்டின் பண்பாட்டைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.
தத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர் (01.12.1885 - 21.08.1981):
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சதாராவில் பிறந்தவர். காந்திய ஆளுமைகளில் ஒருவர். தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். அகமதாபாத் நகரில் குஜராத் வித்யாபீடத்தை நிறுவப் பாடுபட்டவர். தேசியக் கல்வியைப் பரப்புவதில் முன்னணியில் செயல்பட்டவர். அனைவராலும் அன்போடு காகா காலேல்கர் என அழைக்கப்பட்டவர். தாய்மொழியான மராத்தியோடு ஆங்கிலம், குஜராத்தி, இந்தி ஆகிய பிற மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். ஏராளமான பயண நூல்களை எழுதியவர். 'ஜீவன் லீலா' நூலின் ஆசிரியர். சாகித்திய அகாதமி விருதையும் பத்மவிபூஷண் விருதையும் பெற்றவர்.
பாவண்ணன் : இயற்பெயர் பாஸ்கரன். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வளவனூரில் 20.10.1958 அன்று பிறந்தவர். சிறுகதை, நாவல், அனுபவக்கட்டுரை, விமர்சனக்கட்டுரை, சிறார் இலக்கியம் என எல்லா வகைமைகளிலும் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருபவர். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். ‘பருவம்' என்னும் கன்னட நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தமைக்காக சாகித்திய அகாதமி சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருதை 2005இல் இவருக்கு வழங்கியது.
Be the first to rate this book.