தமிழ், உலகின் மூத்த மொழிகளில் ஒன்று. இன்றும் பயன்பாட்டில் இருக்கும் மொழிகளில் முதன்மையானதும்கூட. தென்னிந்திய மொழிகள் தோன்ற மூலமொழியாகவும் தமிழ், இருந்துள்ளது. இதனால்தான் தமிழை, உயர்தனிச் செம்மொழி என அழைக்கிறோம். இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்கள் பலரும் தேவையின் பொருட்டு தமிழைக் கற்றாலும் அதன் சிறப்பால் கவரப்பட்டு தமிழராகவே மாறிப்போனார்கள்; நம் மொழிக்குத் தொண்டுகளும் செய்தார்கள். எல்லீஸ், கால்டுவெல், வீரமாமுனிவர், சீகன்பால்கு போன்ற பலரும் இதற்கான உதாரணங்கள். உலகின் பல நாடுகளில் தமிழர் அல்லாத தமிழ் அறிஞர்கள் இன்றும் தமிழ்த் தொண்டாற்றிவருவதையும் நாம் பார்க்கிறோம்.
தமிழின் முதல் எழுத்து வடிவம், - இப்போது கண்டுபிடிக்கப்பட்ட அகழாய்வுகளின் அடிப்படையில் - பொது ஆண்டுக்கு முன் 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த மொழி, பல நூற்றாண்டுப் பயணத்திற்குப் பிறகு இன்றைக்குள்ள எழுத்து வடிவத்தை எய்தியுள்ளது. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் எழுத்து வடிவம், பல்லவக் கிரந்தத்திற்கு நெருக்கமானது என்பது ஆய்வாளர்களின் துணிபு.
Be the first to rate this book.